ரூ. 50 கோடியில் திருச்சி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தும் திட்டம்
தில்லியிலுள்ள எய்ம்ஸ்-க்கு நிகராக திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்தும் திட்டம் ரூ. 125 கோடியில், ரூ. 110 கோடியில், ரூ. 100 கோடியில் எனக் கூறப்பட்டுவந்து, இப்போது ஒரு வழியாக ரூ. 50 கோடியில் (சூப்பர் ஸ்பெஷாலிட்டி?) தரம் உயர்த்தும் திட்டமாக உருமாறி, உத்தேச திட்ட அறிக்கை அரசின் பரிசீலனையில் இருக்கிறது.
இந்தத் திட்ட அறிக்கை பொதுப் பணித் துறையில் பெறப்பட்டு தலைமைச் செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் கிடைக்கப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் சிபிஐ போலீஸôரால் கைது செய்யப்பட்டுள்ள அ. ராசா, மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது, திருச்சியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்கும் அறிவிப்பு வெளியானது.
அப்போது, ரூ. 100 கோடி, 110 கோடி என்றெல்லாமும் பேசப்பட்டு, திடீரென அந்தத் திட்டம் சேலத்துக்கு கைமாறியது. அதன்பிறகு, மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ், சேலத்திலும், திருச்சியிலும் பேசும்போது திருச்சிக்கு அடுத்த முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார்.
அடுத்த முறையும் இந்தத் திட்டம் மதுரைக்குப் போனது. மதுரையிலுள்ள மக்கள் "நாங்கள் கேட்டது வேறு, நீங்கள் கொடுத்தது வேறு' எனப் போராடியது வேறு கதை.
இந்நிலையில், மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் செய்தியாளர்களைச் சந்திக்கும்போதும் "சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை' என்ன ஆனது என்ற கேள்வி இல்லாமல் இருக்காது. மத்திய நிதி கிடைக்காவிட்டால், மாநில நிதியைக் கொண்டாவது மருத்துவமனையைத் தரம் உயர்த்தித் தருகிறேன் என மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு உறுதியளித்தார்.
இதன்தொடர்ச்சியாக, புதன்கிழமை திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பேரவையின் பொதுக் கணக்குக் குழுவினர் ரூ. 50 கோடியில் மருத்துவமனையை தரம் உயர்த்தும் திட்டப் பணிகள் தொடங்கிவிட்டதாகக் கூறினர். விரைவில் அரசாணை வெளியிடப்படலாம் என நம்பிக்கையும் தெரிவித்தனர்.
தற்போது, அண்ணல் காந்தி அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளின் வருகை அதிகரித்திருப்பதை மருத்துவமனையின் துணை முதல்வர் டாக்டர் அலீம் குறிப்பிட்டு, நாளொன்றுக்கு சராசரியாக 4,000 பேர் வெளி நோயாளிகளாகவும், 800 பேர் உள் நோயாளிகளாகவும் வருகை தருவதைக் குறிப்பிட்டார்.
மேலும், இங்கிருந்து வெளியேற்றப்படும் மருத்துவமனைக் கழிவுகள் நாளொன்றுக்கு சராசரியாக 100 கிலோ அளவுக்கு, செங்கிப்பட்டியிலுள்ள கழிவுகள் அழிக்கும் மையத்துக்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் குறிப்பிட்டனர். அத்தோடு, மருத்துவமனையிலுள்ள பழைய கட்டடங்கள் குறித்தும் மருத்துவமனை நிர்வாகிகள் பொதுக் கணக்குக் குழுவினரிடம் கூறினர். இதற்கிடையே, ரூ. 50 கோடியில் மருத்துவமனையை தரம் உயர்த்தும் திட்டத்துக்கான வரைவு திட்ட அறிக்கை பொதுப் பணித் துறையிடம் பெறப்பட்டு அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
அதில் நரம்பியல் மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சைப் பிரிவுகள், இருதயவியல் மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சைப் பிரிவுகள், குடல்- இரைப்பை மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சைப் பிரிவுகள், ஒட்டு உறுப்புவியல் (பிளாஸ்டிக் சர்ஜரி) மருத்துவம், சிறுநீரக நோய்கள் மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சை, குழந்தைகள் மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சை ஆகிய பிரிவுகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டவும், தேவையான உபகரணங்களை வாங்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறும் மருத்துவமனை வட்டாரங்கள், நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்த அறிவிப்பு இருக்கும் என்றும் தெரிவித்தன.
DINAKARAN
FEB 3 ,2011
No comments:
Post a Comment