Wednesday, December 12, 2012

சிறந்த மூளை நரம்பியல் நிபுணர் திருச்சி டாக்டருக்கு "கவுரவம்' dinamalar

திருச்சி: சிறந்த மூளை நரம்பியல் மருத்துவ நிபுணருக்கான, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., பல்கலை விருதை, திருச்சி மருத்துவக்கல்லூரி நரம்பியல் துறைத்தலைவர் டாக்டர் அலீம் பெற்றுள்ளார்.
மருந்தியல் தினவிழாவையொட்டி, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை சார்பில், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றும் டாக்டர்களுக்கு விருது வழங்கும் விழா, சென்னையில் நடந்தது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய் தலைமை வகித்தார்.
சிறந்த மூளை நரம்பியல் மருத்துவ நிபுணருக்கான விருதை, திருச்சி கி.ஆ.பெ., விசுவநாதம்பிள்ளை அரசு மருத்துவக்கல்லூரி, நரம்பியல் துறைத்தலைவர் டாக்டர் அலீமுக்கு, மருத்துவ பல்கலை துணைவேந்தர் மயில்வாகனன் வழங்கினார்.
நரம்பியல் தொடர்பாக, 107க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை, சர்வதேச மற்றும் தேசிய மூளை நரம்பியல் பத்திரிக்கை மற்றும் மாநாடுகளில் டாக்டர் அலீம் பேசியும், வெளியிட்டும் உள்ளார். திருச்சியில், 18வது அகில இந்திய நரம்பியல் மாநாட்டை சிறப்பாக நடத்தியவர்.
திருச்சி நரம்பியல் நிபுணர் கழகத்தின் தலைவராகவும், கி.ஆ.பெ., அரசு மருத்துவக்கல்லூரி துணை முதல்வராகவும் இருந்தார். திருச்சி அரசு மருத்துவமனைக்கு, 100 கோடி ரூபாய் செலவில் சிறப்பு மருத்துவமனை கட்ட, திட்ட வரைவு தயாரித்து அனுப்ப, மருத்துவ நிர்வாகத்துக்கு உறுதுணையாக இருந்தவர்.
டாக்டர் அலீமின் மூளை நரம்பியல் தொடர்பான ஆய்வுகளையும், பணிகளையும் பாராட்டு வகையில், கடந்த, 2010ம் ஆண்டு நடந்த குடியரசு தினவிழாவில், கலெக்டர் ஜெயஸ்ரீ, பாராட்டுப்பத்திரம் வழங்கி கவுரவித்தார். சிறந்த மருத்துவப்பணிக்காக, 1988, 2005, 2006, 2012ம் ஆண்டுகளில், கலெக்டர்களிடம் சான்றிதழ் பெற்றவர்.
கடந்தாண்டு, குளோபல் மனித உரிமைக்கழகம் சார்பில் இவருக்கு, திருச்சி பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் மீனா, "வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கி கவுரவித்தார். சர்வதேச அளவில் வலிப்பு நோய் விழிப்புணர்வுக்காக செயலாற்றும் அமெரிக்க நிறுவனம், 2012ம் ஆண்டு வலிப்பு நோய் விழிப்புணர்வு தூதராக டாக்டர் அலீமை நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-Dinamalar
29/11/2012

No comments:

Post a Comment