தேசிய வலிப்பு நோய் தினம்
திருச்சி
இன்று தேசிய வலிப்பு நோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் இலவசமாக வழங்கப்படும் என்று மூளை நரம்பியல் நிபுணர் டாக்டர் அலீம் தெரிவித்து உள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 17–ந்தேதி தேசிய வலிப்பு நோய் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. “வலிப்பு நோய் என்பது மூளையின் குறைபாட்டினால் ஏற்படுவதாகும். ஒரு முறை மட்டும் தோன்றும் வலிப்பு என்பது வலிப்பு நோயாகாது. வலிப்பு நோயுள்ளவர்களுக்கு அடிக்கடி வலிப்பு நிகழ்வுகள் தோன்றும்“ என்கிறார் திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதன் அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியரும், மூளை நரம்பியல் நிபுணருமான டாக்டர் எம்.ஏ. அலீம்.
வலிப்பு நோய் தொடர்பாக அவர் மேலும் கூறி இருப்பதாவது:–
ஒரு கோடி பேருக்கு வலிப்பு
வலிப்பு நோய் என்பது ஒரு மன நோய் அல்ல. மற்றும் அது அறிவுதிறன் குறைபாடு இருப்பதற்கான அறிகுறியும் அல்ல. வலிப்பு நோயுள்ள ஒருவர் மற்றவரை காட்டிலும் எந்த விதத்திலும் வித்தியாசமானவர் அல்ல. வலிப்பு நோய் யாருக்கு வேண்டுமானாலும் எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம். இந்தியாவில் 1 கோடி பேருக்கு வலிப்பு நோய் உள்ளது.
வலிப்பு நோய் மரபு வழி நோய் அல்ல. மேலும் இந்த நோய் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும் நோயும் அல்ல. வலிப்பு நோய் பெரும்பாலும் குழந்தை பருவத்தில் தான் தொடங்குகின்றன. ஆனால் எந்த வயதிலும் இந்த நோய் வரலாம். வலிப்பு நோய் இருப்பதாக உணர்ந்தால் உடனே டாக்டர்களிடம் சென்று உரிய சிகிச்சை பெற வேண்டும். வலிப்பு வந்து விட்டால் அதனை நிறுத்த முயற்சிக்க கூடாது. வலிப்பு ஏற்படும்போது வாயில் எதையும் திணிக்க வேண்டாம். போதுமான காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும. வாந்தி எடுப்பதை விழுங்கி விடாமல் இருக்க நோயாளி இருக்கும் பக்கத்தை மாற்றிக்கொள்ளவேண்டும்.
இலவச மாத்திரைகள்
திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனையில் வலிப்பு நோய்க்கான சிகிச்சைகள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆணைப்படி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு ஒவ்வொரு நோயாளிக்கும் இலவசமாக மாதம் ஒரு முறை வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் வழங்கப்படுகிறது. இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
இவ்வாறு டாக்டர் அலீம் கூறினார்.
No comments:
Post a Comment