கரூர், நவ. 16-
கரூர் மாவட்டம் தோகை மலை பகுதியை சேர்ந்தவர் ராமசாமி, தனியார் நிறுவனத் தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சபரி (வயது 9). அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த சபரியை அப்பகுதியில் சுற்றித் திரிந்த வெறிநாய் ஒன்று கடித்தது. அழுதுகொண்டே வீட்டிற்கு சென்ற சபரி இது பற்றி பெற்றோரிடம் கூறியுள்ளான்.
ஆனால் அவர்கள் உடனே மகனை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லாமல் சாதாரணமாக எடுத்துக் கொண்டனர். அத்துடன் கைப்பக்குவமாக மருந்தும், பத்திய சாப்பாடும் கொடுத்துள்ளனர். இதற்கிடையே சபரியின் நடவடிக்கைகளில் மாற்றத்தை உணர்ந்த பெற்றோர் கரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவனை பரிசோதித்த டாக்டர் நோய் முற்றிவிட்டதாகவும், உடனே அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறும் கூறியுள்ளார்.
இதையடுத்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களும் கைவிரித்தனர். பெற்றோர் தகராறு செய்ததால் சபரியை தனி அறையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இருந்த போதிலும் பலனின்றி நேற்று இரவு சிறுவன் சபரி பரிதாபமாக இறந்தான். இதுபற்றி மூளை நரம்பியல் டாக்டர் அலீம் கூறுகையில், வெறிநாய் கடித்தால் உடனே தடுப்பூசி போட வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாகவே தடுப்பூசிகள் போடப்படுகின்றன.
வெறி நாய் கடித்தால் முதலில் தலைவலி அதிகம் இருக்கும். தொடர்ந்து பேச்சில் குளறு படியும், எப்போது தண்ணீர் குடித்தாலும் புரையேறும் சூழ்நிலையும் ஏற்படும். எனவே நாய் கடித்தால் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் உரிய சிகிச்சை பெறவேண்டும் என்றார்.
No comments:
Post a Comment