Dinamani
Author: திருச்சி
First Published: Oct 23, 2012 2:18 PM
Last Updated: Oct 23, 2012 2:18 PM
தொடக்க நிலையிலிருந்தே தொடர்ந்து சிகிச்சை பெற்றால், "டெங்கு' குணப்படுத்தக் கூடிய காய்ச்சல்தான் என்றார் மாநில மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ். விஜய்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்களுக்கான டெங்கு விழிப்புணர்வு கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
திருச்சி, புதுக்கோட்டை, நாகை, மதுரை, ஈரோடு, வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கு அரசு செயலர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுக்கள் நேரடியாக மாவட்டங்களுக்குச் சென்று டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
2 மாதங்களில் டெங்குவை முழுமையாக ஒழிக்க ரூ. 2.50 கோடி நிதி ஒதுக்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
காய்ச்சல் ஏற்பட்ட 2 நாள்களுக்குள் ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று தொடக்க நிலையிலிருந்தே தொடர்ந்து சிகிச்சை பெற்றால், டெங்கு காய்ச்சலை 100% குணப்படுத்த முடியும்.
"ரேபிட்-காட்' பரிசோதனை மூலம் டெங்குவை உறுதி செய்ய முடியாது. "எலிசா' பரிசோதனையின் மூலம் மட்டுமே உறுதி செய்ய முடியும். பொதுமக்கள் காய்ச்சிய குடிநீரையே அருந்த வேண்டும். குளோரினேசன் செய்யப்பட்ட குடிநீரை மட்டுமே மக்களுக்கு விநியோகிக்க வேண்டும்' என்றார் டாக்டர் விஜய்.
விழிப்புணர்வு பேரணி: டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். கிஆபெ விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் தொடங்கிய இந்தப் பேரணி, திண்டுக்கல் சாலை, அரிஸ்டோ ரவுண்டானா, மத்திய பேருந்து நிலையம் வழியாக வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளியில் முடிவடைந்தது.
"பயோமெட்ரிக்' வருகைப் பதிவு: திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் டாக்டர்கள் மற்றும் பணியாளர்களின் வருகையை துல்லியமாகக் கண்காணிக்கும் வகையில், "பயோமெட்ரிக்' வருகைப் பதிவு முறையை அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.
இந்த மருத்துவமனைகளில் டெங்கு சிறப்பு வார்டுகளையும் அவர் நேரில் பார்வையிட்டு, சிகிச்சை பெற்று வருவோரிடம் அது குறித்து கேட்டறிந்தார்.
இந்த நிகழ்ச்சிகளில், டெங்கு தடுப்பு சிறப்பு கண்காணிப்பு அதிகாரி பங்கஜ்குமார் பன்சால், மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன், எம்பி ப. குமார், எம்எல்ஏக்கள் மு. பரஞ்ஜோதி, ஆர். மனோகரன், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் வம்சதாரா, மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் இயக்குநர் டாக்டர் எஸ். பரஞ்ஜோதி, பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் பொற்கை பாண்டியன், மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் அ. கார்த்திகேயன், துணை முதல்வர் எம்.ஏ. அலீம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment