தமிழக அரசின் காப்பீடு திட்டத்தால் 1.34 கோடி குடும்பங்கள் பயன்
திருச்சி: தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள புதிய காப்பீடு
திட்டத்தால், தமிழகத்தில் 1.34 கோடி குடும்பங்கள் பயனடைகிறது. சிசு முதல்
வயோதிகர் வரை பயனடைகின்றனர், என அரசு மருத்துவக்கல்லூரி துணை முதல்வர்
டாக்டர் அலீம் பேசினார்.
திருச்சி அண்ணா கோளரங்கில் நிபுணர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நேற்று
நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அரசு மருத்துவக்கல்லூரி துணை
முதல்வரும், மூளை நரம்பியல் நிபுணருமான டாக்டர் அலீம், முதல்வரின்
காப்பீட்டு திட்டம் மற்றும் மூளை நரம்பு நோய்கள் தடுப்பு குறித்து
பேசியதாவது:
தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள புதிய காப்பீட்டுத் திட்டத்தில்
பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளது. இதற்கு முந்தைய மருத்துவத்திட்டத்தைவிட
இத்திட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
இத்திட்டத்தின் கீழ் மருத்துவம் மற்றும் ஆபரேஷன் மூலம் பயன்படக்கூடிய 1,016
நோய்களுக்கு சிகிச்சை பெற வழிவகை உள்ளது. இதற்கு முன் இருந்த
மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தில், இவ்வளவு நோய்களுக்கான சிகிச்சைகள்
இடம் பெறவில்லை. 113 நோய்களுக்கு தொடர் சிகிச்சை பெற வழிவகை
செய்யப்பட்டுள்ளது. 23 நோய்களை கண்டறிந்து, சிகிச்சை பெறும் வசதி
இத்திட்டத்தில் உள்ளது.
56 நோய்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம். குடல்வால் ஆபரேஷன்,
கர்ப்பப்பை அகற்றுதல் போன்ற ஆபரேஷன்கள் அரசு மருத்துவமனைகளில் செய்து
கொள்ளலாம்.
புதிய காப்பீடு திட்டம் மூலம் தமிழகத்தில் 1.34 கோடி குடும்பங்கள்
பயனடைகிறது. ஆண்டுக்கு ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை நான்கு
ஆண்டுகளுக்கு இந்த காப்பீடு திட்டம் பயன்தரக்கூடியதாக உள்ளது.
தமிழக அரசு பல சுகாதாரத்திட்டங்களையும் அறிவித்து, செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக, சிறப்பு சிகிச்சை மருத்துவமனையும், குழந்தைகளுக்கென சிறப்பு
சிகிச்சை மருத்துவமனை சென்னையில் உள்ளது. மூன்றாவது சிறப்பு சிகிச்சை
மருத்துவமனை 100 கோடி ரூபாயில் திருச்சியில் உருவாக்கும் பணி நடந்து
வருகிறது.
நடமாடும் மருத்துவமனைகள், நோயாளிகளை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் வாகன
உதவிகள், பிரத்யேக தடுப்பூசி திட்டங்கள் போன்ற சிறப்பான சுகாதார
திட்டங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
இதனால், தமிழகத்தில் சிசு முதல் வயோதிகர் வரை பயனடைந்து வருகின்றனர். தமிழக
முதல்வர் ஜெயலலிதாவின் புதிய காப்பீட்டுத் திட்டத்தால்,
வெளிநாட்டிலிருந்து தமிழகத்துக்கு சிகிச்சை பெற வரும் வெளிநாட்டினரின்
எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் கோளரங்க பொறுப்பாளர் பழனிச்சாமி, அலுவலர், கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment