Sunday, October 17, 2010

மூடநம்பிக்கையை ஒழித்தால் குணமாக்கக் கூடியதே

 
 
மூடநம்பிக்கையை ஒழித்தால் குணமாக்கக் கூடியதே

First Published : 17 Nov 2009 11:43:14 AM IST


திருச்சி, நவ. 16:  நம்மிடையே மிகுந்த அச்சத்தை உருவாக்கி, ஏராளமான மூட நம்பிக்கை செயல்களுக்குள் நம்மைத் திணித்து விட்டிருக்கும் பிரதான நோய்களில் ஒன்று வலிப்பு நோய்.
  காக்கா கறி தின்றால் இந்த நோய் போய்விடும் என்பதாலேயே பேச்சு வழக்கில் "காக்காய் வலிப்பு' என்றாகிவிட்டிருக்கிறது. பழுக்க காய்ச்சிய இரும்பைக் கொண்டு உடலில் சூடுபோட்டால் வலிப்பு குணமாகிவிடும் என்ற கருத்து கிராமத்தில் இன்னமும் இருக்கிறது.
  வலிப்பு வந்தவுடன் இரும்புத் துண்டு ஒன்றைக் கையில் பிடிக்க வைத்தால் வலிப்பு நின்றுவிடும் என்பதாக கிளம்பிய மூடநம்பிக்கையை அடுத்து, நிரந்தரமாக காலில்- கையில் இரும்பு வளையங்களுடன் திரியும் நோயாளிகளை நகரப் பகுதிகளிலேயே பார்க்க முடிகிறது.
  திருமணம் செய்து வைத்தால் எல்லாம் சரியாகிவிடும், இந்த நோயுள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளவே கூடாது... இப்படி இன்னும் இன்னும், மூடநம்பிக்கைகளுக்கு குறைவே இல்லை.
  ஆனால், அரசு மருத்துவமனையில் கிடைக்கும் இலவச மருந்துகளை தொடர்ச்சியாக, முறையாக உள்கொண்டாலே போதும், சில ஆண்டுகளில் வலிப்பை குணப்படுத்திவிட முடியும் என்பதே உண்மை.
  உலக வலிப்பு நோய் தினத்தையொட்டி (நவ. 17), திருச்சி கிஆபெ விசுவநாதன் அரசு மருத்துவக் கல்லூரியின் மூளை நரம்பியல் உதவிப் பேராசிரியர் டாக்டர் எம்.ஏ. அலீம் "தினமணி'க்கு அளித்த பேட்டி:
  ""இந்தியாவில் 56 லட்சம் பேர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 3.25 லட்சம் பேரும், திருச்சி மாவட்டத்தில் ஏறத்தாழ 20,000 பேரும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  அதாவது ஒரு லட்சம் மக்கள் தொகையுள்ள பகுதியில் ஓராண்டுக்கு 60 முதல் 70 பேர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.   இவர்களில் பெரும்பாலானவர்கள் கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்களே. காரணம், இந்தப் பகுதிகளில்தான் மூடநம்பிக்கைகள் இன்னமும் "ஆல் போல் தழைத்து' காணப்படுகின்றன.
  இரும்புத் துண்டைக் கொடுத்தால் வலிப்பு நின்றுவிடும் என்பது தவறான கருத்து. எந்த வகையான வலிப்பாக இருந்தாலும், முதல் மூன்று நிமிஷங்களில் நின்றுவிடும். நாம் இரும்புத் துண்டைத் தேடிக் கொடுக்கவே இந்த மூன்று நிமிஷம் போதாது.
  70 சதம் வலிப்பு நோயை மருந்து கொடுப்பதன் மூலமே சரி செய்ய முடியும். 20 சதம் பேருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொண்டால் போதும். எனவே, 90 சதம் வலிப்பு நோயைக் குணப்படுத்த முடியும் என்ற உண்மையை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
  உரிய நேரத்தில் மருத்துவம் பார்ப்பதும், முறையான ஆலோசனையுடன் மருத்துவத்தைத் தொடர்வதும் முக்கியமானது'' என்றார் அலீம்.

No comments:

Post a Comment