Thursday, October 21, 2010

திருச்சியில் ரூ. 300 கோடியில் புதிய மருத்துவமனை அமைக்க முயற்சி

"திருச்சியில் ரூ. 300 கோடியில் புதிய மருத்துவமனை அமைக்க முயற்சி'
First Published : 10 Dec 2009 11:46:13 AM IST

Last Updated : 10 Dec 2009 01:38:03 PM IST

திருச்சி, ஆக. 23:   திருச்சியில் ரூ. 300 கோடி செலவில் புதிய அரசு மருத்துவமனை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு.
  திருச்சி அரசு மருத்துவமனையில் மத்திய ரோட்டரி சங்கம் சார்பில் உடனடி சிகிச்சைப் பிரிவுக்கு ரூ. 3.08 லட்சம் மதிப்பிலான 40 கட்டில்கள், படுக்கை விரிப்புகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
  இந்தப் பொருள்களை ரோட்டரி சங்கத்திடமிருந்து பெற்று, மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கிய மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு பேசியது:
  "திருச்சியில் உள்ள வியாபாரிகளும், வசதி படைத்தவர்களும் அரசு மருத்துவமனைக்கு தங்களால் இயன்ற அளவு உதவிகளை வழங்க வேண்டும்.
  அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்தும் திட்டம் பல்வேறு காரணங்களால் தடைபட்டுள்ளது. தற்போது, தமிழகத்தில் ரூ. 300 கோடியில் புதிய மருத்துவமனை கட்ட மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தப் புதிய அரசு மருத்துவமனையை திருச்சியிலேயே அமைக்க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி மூலம் முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம்.
  மேலும், ரூ. 50 கோடியில் புதியக் கட்டடங்கள் கட்டவும் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது' என்றார் அவர்.
  விழாவில், மாவட்ட ஆட்சியர் தா. சவுண்டையா, மருத்துவமனை முதன்மையர் என். பாலசுப்பிரமணியன், உறைவிட மருத்துவ அலுவலர் எஸ். சிவக்குமார், துணைக் கண்காணிப்பாளர் ஆர். குமார், மருத்துவமனை கண்காணிப்பு அலுவலர் எம்.ஏ. அலீம், மேயர் எஸ். சுஜாதா, துணை மேயர் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி, ரோட்டரி சங்கத் தலைவர் செல்வம், முன்னாள் ஆளுநர் தங்கராஜ் போஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment