திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் உலக வங்கிக்குழுவினர் நேரில் ஆய்வு
பதிவு செய்த நாள் : ஜூன் 09,2010,03:12 IST
திருச்சி: திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் ஒன்பது கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த மகப்பேறு மருத்துவப்பிரிவு கட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பாக உலக வங்கியின் மூன்று பேர் கொண்ட பரிந்துரைக்குழு மருத்துவமனை வளாகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டது. திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த மகப்பேறு மருத்துவப்பிரிவு கட்ட ஒன்பது கோடி ரூபாய் செலவில் திட்ட வரையறை தயாரிக்கப்பட்டு, அதற்கு உலக வங்கியிடம் நிதியுதவி கோரப்பட்டது.
குழந்தைகள் நலன்குறித்த திட்டம் என்பதால் உலக வங்கியும் நிதியுதவி அளிக்க ஒப்புக் கொண்டது. அதன்பேரில் திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த மகப்பேறு மருத்துவப்பிரிவு கட்ட போதுமான இட வசதி உள்ளதா? என்பதை கடந்த வாரம் உலக வங்கியின் கட்டிட வடிவமைப்பக்குழு வந்து ஆய்வு செய்து சென்றது. உலகவங்கி அளிக்கும் நிதியுதவியை இறுதி செய்யும் பரிந்துரைக்குழு நேற்று மதியம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு வந்து, மருத்துவமனை வளாகம் முழுவதும் ஆய்வு செய்தது. அந்த குழுவில் உலக வங்கியன் முதுநிலை சுகாதார சிறப்பு அலுவலர் டாக்டர் ப்ரீத்தி ஓடீசா, சங்கீதா பிண்டோ, தமிழக சுகாதார திட்ட சிறப்பு ஆலோசகர் சுகுமார் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். பின்னர் அந்த குழு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் வீரபாண்டியன், கி.ஆ.பெ., விஸ்வநாதம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் (பொறுப்பு) அலீம் மற்றும் அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியது. ஆலோசனைக்கு பின் உலக வங்கி பரிந்துரைக்குழு சிறப்பு அலுவலர் டாக்டர் ப்ரீத்தி ஓடீசா நிருபர்களிடம் கூறியதாவது:
உலக வங்கி மூலம் தமிழகத்தில் உள்ள 270 மகப்பேறு மருத்துவ பிரிவுகளை ஐந்தாண்டு திட்டமாக மேம்படுத்த 117 மில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதியில் இதுவரை 90 மில்லியன் டாலர் வழங்கப்பட்டுள்ளது. மீதியுள்ள தொகைக்காக இரண்டாம் கட்ட ஆய்வு தமிழகம் முழுவதும் செய்யப்பட்டு வருகிறது. ஓசூர், கிருஷ்ணகிரி, பாப்பிரெட்டிப்பட்டி, சேலம், நாமக்கல் ஆகிய பகுதிகளில் ஆய்வு முடிந்து விட்டு திருச்சி வந்துள்ளோம். இந்த ஆய்வின் அறிக்கை நாளை (இன்று) சென்னையில் உள்ள சுகாதாரத்துறை இயக்குனரிடம் சமர்ப்பிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். பரிந்துரைக்குழுவின் ஆய்வறிக்கை திருப்தி அளிக்கும்பட்சத்தில் இன்னும் சில மாதங்களில் திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த மகப்பேறு பிரிவு கட்ட பணிகள் துவக்கப்படும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment