திருச்சி, அக். 1: திருச்சியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நிச்சயம் அமைக்கப்படும் என்றார் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு.
திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முத்தமிழ் மன்றத் தொடக்க விழாவில் அவர் மேலும் பேசியது:
"மருத்துவக் கல்லூரி மாணவர்கள் என்றால் மேலைநாட்டு கலாசாரம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று இல்லாமல், நம்முடைய கலாசாரத்தின் படி கலைநிகழ்ச்சிகளை நடத்தியுள்ளீர்கள். இதைக் கண்டு நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
1996 -ல் அரசு மருத்துவக் கல்லூரி கட்டும் திட்டம் பெரும் சிரமத்துக்கிடையே திருச்சிக்கு கொண்டு வரப்பட்டது. புறநகர் பகுதிக்குச் செல்ல இருந்த இந்தக் கட்டடம் மாநகரப் பகுதியில் 14 மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டது.
திருச்சிக்கு வர வேண்டிய "சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனை பல்வேறு அரசியல் காரணங்களால் சேலத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டது. ஆனால், நிச்சயம் திருச்சியில் "சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனை அமைந்தே தீரும்.
இந்த மருத்துவமனையை தற்போது உள்ள மருத்துவமனை வளாகத்திலேயே அமைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்' என்றார் அவர்.
விழாவில், மாவட்ட ஆட்சியர் தா. சவுண்டையா பேசியது:
"உலகிலேயே தொன்மையான மொழிகளில் ஒன்று தமிழ் மொழி.
தமிழர்களின் கலாசாரம், கலை, சிற்பங்கள் ஆகியவற்றை பாதுகாப்பது அரசின் கடமை மட்டுமல்ல. ஒவ்வொரு தனி மனிதனின் கடமையுமாகும்.
தமிழர்களின் கலைகளை பதிவு செய்து வருங்கால சந்ததியினரிடம் கொண்டுச் செல்ல நாம் அனைவரும் முன்வர வேண்டும்' என்றார் அவர்.
நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அன்பில் பெரியசாமி, கே.என். சேகரன், மேயர் எஸ். சுஜாதா, துணைமேயர் மு. அன்பழகன், ஆணையர் த.தி. பால்சாமி, மருத்துவமனை முதன்மையர் அ. கார்த்திகேயன், துணை முதன்மையர் எம்.ஏ. அலீம், அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் (பொறுப்பு) எஸ். பன்னீர்செல்வம், கல்லூரி மாணவர் பேரவைத் தலைவர் மா. கணேசன், தமிழ்மன்றச் செயலர் செ. மணிபிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
No comments:
Post a Comment