Sunday, November 14, 2010

உலகில் மருத்துவம் தான் முதன்மையான தொழில் : புத்தக வெளியீட்டு விழாவில் கலெக்டர் புகழாரம்

உலகில் மருத்துவம் தான் முதன்மையான தொழில் : புத்தக வெளியீட்டு விழாவில் கலெக்டர் புகழாரம்

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2010,02:05 IST
தினமலர்

திருச்சி: ""டாக்டர்கள் கடவுளாக பார்க்கப்படுவதால், உலகில் மருத்துவம் தான் முதன்மையான தொழில்,'' என்று வாதநோய் பற்றிய விழிப்புணர்வு புத்தக வெளியீட்டு விழாவில் திருச்சி கலெக்டர் மகேசன் காசிராஜன் பேசினார். திருச்சி கி.ஆ.பெ., விஸ்வநாதம் அரசு மருத்துவக்கல்லூரி துணைமுதல்வரும், நரம்பியல் துறை வல்லுனருமான டாக்டர் அலீம் தமிழில் எழுதிய வாதநோய் வராமல் தடுக்கும் முறைகள் பற்றிய விழிப்புணர்வு புத்தக வெளியீட்டு விழா மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. இதில், பங்கேற்ற கலெக்டர் மகேசன் காசிராஜன், உலக பக்கவாத தினத்தையொட்டி டாக்டர் அலீம் எழுதிய புத்தகத்தை வெளியிட, அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ மாணவிகள், நர்சிங் பயிலும் மாணவிகள் என பலர் பங்கேற்றனர். அரசு மருத்துவக்கல்லூரி துணைமுதல்வர் டாக்டர் அலீம் பேசியதாவது: நாட்டில் முன்பெல்லாம் பரவக்கூடிய நோய்கள் இருந்து வந்தது. அவை மத்திய, மாநில அரசுகளின் சுகாதார திட்டங்களால் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது மக்களின் முறையற்ற பழக்கவழக்கம், வாழ்க்கை முறை ஆகியவற்றால் மாரடைப்பு, சர்க்கரை நோய், வாதம் ஆகிய தொற்று அல்லாத நோய்கள் வருகின்றன. சுதந்திரம் பெறும் முன் இந்தியர்களின் சராசரி வயது 37ஆக இருந்தது. ஆனால், தற்போது சுகாதாரத்திட்டங்களால் 65ஆக மாறியுள்ளது.

உணவு, வாழ்க்கை முறையில் தவறான பழக்கவழக்கங்களே வாதநோய்க்கு முக்கிய காரணமாகும். கடந்த 1960ம் ஆண்டுகளில் நாட்டில் ஒருலட்சம் பேருக்கு வெறும் 13 பேர் தான் வாதநோயால் பாதிக்கப்பட்டனர். ஆனால் தற்போது ஒருலட்சம் பேருக்கு 141 பேர் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு தவறான வாழ்க்கை முறையே காரணம். உலக பக்கவாத தினம் கொண்டாடும் நோக்கமே வாதநோய் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான். வாதநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூன்று மணிநேரத்தில் சிகிச்சை அளித்தால் விரைவில் குணமாகிவிடுவர். இவ்வாறு அவர் பேசினார். திருச்சி கலெக்டர் மகேசன் காசிராஜன் பேசியதாவது: மனித சமுதாயத்துக்கு எதிராக பலநோய்கள் உள்ளது. அவற்றை அழிக்க மருத்துவக்கல்வி முக்கியம். நரம்பியல் துறையை பொறுத்தவரை நீண்டநாள் சிகிச்சை எடுக்கவேண்டும் என்று கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் எந்தநோயால் பாதிக்கப்பட்டவரும் குறித்தநேரத்தில் மருத்துவ சிகிச்øகு உட்பட்டால் விரைவில் குணமாகும் வாய்ப்பு உள்ளது. அதற்காகத்தான் அரசால் 108 ஆம்புலன்ஸ் திட்டம், கலைஞர் காப்பீடு திட்டமெல்லாம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

டாக்டர்கள் வரும் நோயாளிகளிடம் நோய்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மருத்துவத்தை பொறுத்தவரை கனிவான பார்வை, அன்பான உபசரிப்பு, கனிவான பேச்சு ஆகியவை இருக்கவேண்டும். உலகில் எவ்வளவு தொழில் இருந்தாலும், மருத்துவம் தான் முதன்மையான தொழிலாகும். அதிலும் வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாடுகளுக்கு மருத்துத்துறை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. டாக்டர்கள் மக்களால் கடவுள் போல் பார்க்கப்படுகின்றனர். மக்களை எளிதில் சென்றடையும் வகையில் தமிழில் வாதநோய் விழிப்புணர்வு புத்தகம் எழுதிய டாக்டர் அலீமை பாராட்டுகிறேன். திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு இன்னும் அதிக வசதிகள் வரும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment