மருத்துவம் குறித்த விழிப்புணர்வை மருத்துவர்கள் ஏற்படுத்த யோசனை
First Published : 10 Nov 2010 12:43:05 PM IST
தினமணி
Last Updated :
திருச்சி, நவ. 9: மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதுடன் மருத்துவம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் மகேசன் காசிராஜன்.
திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலக வாத நோய் தின நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது:
"மனித சமுதாயம் பலவித நோய்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையில் உள்ளது. இன்றைக்கு உள்ள வாழ்க்கை முறையால் பல வித நோய்கள் ஏற்படுகின்றன.
நோய் வந்த பிறகு சிகிச்சை அளிப்பதைவிட முன்னெச்சரிக்கையாகத் தற்காத்துக் கொள்வது நல்லது.
மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதுடன், அந்த நோய்க்கான காரணங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.
மருத்துவர்களை மக்கள் கடவுளாக நினைக்கிறார்கள். அவர்களிடம் மருத்துவர்கள் கனிவுடன் பழகவேண்டும்.
திருச்சி அரசு மருத்துவமனைக்கு நிறைய வசதிகள் வர உள்ளன என்றார் மகேசன் காசிராஜன்.
நிகழ்ச்சியில், கி.ஆ.பெ. விசுவாநாதம் அரசு மருத்துவக் கல்லூரி துணை முதல்வரும், மூளை நரம்பியல் நிபுணருமான மருத்துவர் எம்.ஏ. அலீம் எழுதிய வாத நோய், அவற்றைத் தவிர்ப்பது குறித்த கையேட்டை மாவட்ட ஆட்சியர் மகேசன் காசிராஜன் வெளியிட, அதை அரசு மருத்துவமனைக் கண்காணிப்பாளர் எஸ். பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார்.
மருத்துவர் அலீம் பேசியது:
"ஒரு காலத்தில் தொற்று நோய்கள் அதிகம் பரவின. தற்போது மக்களின் வாழ்க்கை முறை, நடவடிக்கைகளால் சர்க்கரை, வாதம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
நம் நாடு சுதந்திரம் அடைந்த காலக்கட்டத்தில் சராசரி மனிதரின் ஆயுள் 37 ஆண்டுகளாக இருந்தது. மருத்துவ வளர்ச்சி, அரசின் சுகாதாரத் திட்டங்கள் போன்ற காரணங்களால் தற்போது இது 65 ஆண்டுகளாக ஆக உயர்ந்துள்ளது.
தவறான பழக்க வழக்கங்களால் பலவித நோய்கள் உருவாகின்றன. அதில் ஒன்றுதான் வாத நோய்.
1960-ம் ஆண்டில் ஒரு லட்சம் பேரில் 13 பேருக்கு இந்த நோய் பாதிப்பு இருந்தது. தற்போது 141 பேருக்கு இந்த நோய் உள்ளது. திருச்சி மாவட்டத்தில் ஒரு லட்சம் பேரில் 26 பேருக்கு இந்த நோய் உள்ளது.
பக்கவாதம் ஏற்பட்டு 3 மணி நேரத்துக்குள் உரிய சிகிச்சை எடுத்தால் சரிசெய்துவிடலாம்' என்றார் அலீம்.
No comments:
Post a Comment