Sunday, November 7, 2010

இலவச பன்றிக்காய்ச்சல் தடுப்பு மருந்து திருச்சி அரசு மருத்துவமனையில் வழங்கல்

இலவச பன்றிக்காய்ச்சல் தடுப்பு மருந்து திருச்சி அரசு மருத்துவமனையில் வழங்கல்
பதிவு செய்த நாள் : நவம்பர் 07,2010,04:21 IST

திருச்சி: திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சலுக்கான இலவச சொட்டு மருந்து வழங்குவதை தமிழக அமைச்சர் நேரு துவக்கிவைத்தார். தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்க மாநில அரசின் சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள், பணியாளர்களுக்கு இலவசமாக பன்றிக்காய்ச்சல் தடுப்பு மருந்து போடப்பட்டது. பொதுமக்கள் சலுகை விலையில் பன்றிக்காய்ச்சல் தடுப்பு மருந்தை தனியாரிடம் வாங்கிக் கொள்ளலாம் என்று அரசால் அறிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஏழை, எளிய மக்களால் பணம் கொடுத்து பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி வாங்க முடியாது என்பதால், அரசே இலவமாக வழங்கவேண்டும் என்று அனைத்து தரப்பினரிடமிருந்து கோரிக்கை எழுந்தது.



"கலைஞர் காப்பீடு திட்ட அடையாள அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் பன்றிக்காய்ச்சல் சொட்டு மருந்து அரசு மருத்துவமனைகளில் போடப்படும்' என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் நோய்க்கான இலவச தடுப்பு சொட்டு மருந்து வழங்குவதுக்கான துவக்கவிழா நேற்று நடந்தது. இதில், போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரு, டி.ஆர்.ஓ., ராமன், மாநகராட்சி கமிஷனர் பால்சாமி, அரசு மருத்துவக்கல்லூரி டீன் கார்த்திகேயன், துணைமுதல்வர் டாக்டர் அலீம், கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ., பெரியசாமி, துணைமேயர் அன்பழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பன்றிக்காய்ச்சல் தடுப்பு சொட்டு மருந்து வழங்குவதை அமைச்சர் நேரு துவக்கிவைத்தார். திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் நேற்று முதல் பன்றிக்காய்ச்சல் தடுப்பு சொட்டு மருந்து இலவமாக காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை வழங்கப்படும். சொட்டு மருந்து வேண்டுவோர் கலைஞர் காப்பீடு திட்ட அடையாள அட்டையுடன் வரவேண்டும். மூன்று வயதுக்கு மேற்பட்ட மற்றும் ஆஸ்துமா, கடும் காய்ச்சல், அலர்ஜி போன்றவை இல்லாதவர்கள் மட்டுமே பன்றிக்காய்ச்சல் தடுப்பு சொட்டு மருந்து போட்டுக் கொள்ளவேண்டும் என்று அறிவுத்தப்பட்டுள்ளது.

தினமலர்

No comments:

Post a Comment