Sunday, September 22, 2019

Keeladi Archaeological Excavation in Tamilnadu Revealed our 6th century BC Ancient Sangam era Tamil culture

கீழடித் தொல்பொருள்களின் காலம் கிமு ஆறாம் (கிமு 600) நூற்றாண்டு என்பது உறுதியாகிவிட்டது. அந்த உறுதிப்பாடு உயர்த்திப் பிடிக்கும் தமிழ்நிலத்தின் வரலாற்றுப் பெருஞ்சிறப்புகள் யாவை ?

1. அப்போது புத்தர் பிறந்திருக்கவில்லை. புத்தர் கிமு 563ஆம் ஆண்டுதான் பிறக்கிறார். கீழடித் தொல்லகம் புத்தர் காலத்திற்கும் முந்தி நிற்கிறது. இந்திய வரலாற்றின் முதற்பக்கங்கள் மொகஞ்சதாரோ, அரப்பா, அடுத்து புத்தர், மகாவீரர் என்று தொடங்கும். சான்றுகளைக் கேட்கும் வரலாறு இனி வாயடைத்து நிற்கும். இந்திய வரலாற்றின் முதற்பக்கங்களில் தமிழர் நாகரிகத்தைப் பற்றி இனிக் கூறியாகவேண்டும்.

2. அப்போது அஜந்தாக் குகைகள் குடையப்பட்டிருக்கவில்லை. அஜந்தாக் குகைகளில் புத்தமதச் செல்வாக்கு மிக்கிருப்பதால் அவை புத்தர் காலத்திற்குப் பிறகே பெரும்பாலும் குடையப்பட்டன. அதன் பழைமையான குகையினைக் கிமு இரண்டாம் நூற்றாண்டு வரைக்கும் ஏற்றுக்கொள்கின்றனர். கீழடிச் சான்றுகள் அவற்றுக்கும் முந்தியன.

3. கபாடபுரத்திற்கு நேர்ந்த கடல்கோளின் பின்னர் இன்றைய மதுரை நகரத்திற்குப் பாண்டியர்கள் இடம்பெயர்ந்தனர். அங்கே தோற்றுவித்து வளர்க்கப்பட்டதே கடைச்சங்கம். கடைச்சங்கத்தின் காலம் கிமு இரண்டாம் நூற்றாண்டு என்பதற்கே பலர் பல்வேறு குறுக்கு வழக்குகளோடு வருவர். சான்றெங்கே, ஆதாரம் எங்கே என்று நிற்பர். இப்போது கிமு ஆறாம் நூற்றாண்டுத் தமிழ் எழுத்துகள் தெளிந்த சான்றுகளாகிவிட்டன.

4. ஆதன், சாத்தன் ஆகிய பெயர்கள் நம் இலக்கண உரைகளில் தொடர்ந்து மேற்கோள் காட்டப்படுகின்றன. ஆதனின் தந்தை ஆந்தை எனப்படுவார். சாத்தனின் தந்தை சாத்தந்தை எனப்படுவார். பிசிர் என்ற ஊரில் வாழ்ந்த ஆதனின் தந்தையே பிசிர் ஆந்தையார் எனப்பட்டார். அகநானூறு, புறநானூறு, நற்றிணை ஆகிய சங்க இலக்கிய நூல்களில் பிசிராந்தையார் பாடிய ஆறு பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவர் யாராயினும் ஆதன் என்ற பெயர் வைக்கும் பழக்கம் தொல் தமிழரிடையே பரந்திருந்தது என்பது வெள்ளிடைமலை. ஆதன் என்பதற்கு உயிர் என்று பொருள். உயிரன்.

5. ஒடிய மாநிலம் புவனேசுவரம் உதயகிரிக் குகைகளின் நெற்றியில் பொறிக்கப்பட்டுள்ள காரவேலனின் கல்வெட்டு பதின்மூன்று நூற்றாண்டுகளாய் நிலவிய சேர சோழ பாண்டியர்களின் கூட்டாட்சி வலிமையைக் கூறுகிறது. “தமிர தேக சங்காத்தம்” என்பது அக்கல்வெட்டினில் உள்ள தொடர். ஒடிய மன்னன் காரவேலன் அசோகருக்குப் பிறகு அப்பகுதியினை ஆண்டவன். கிமு இரண்டாம் நூற்றாண்டினைச் சேர்ந்தவன். “அக்கல்வெட்டினில் இருப்பது பதின்மூன்று நூற்றாண்டுகள் இல்லை, வெறும் பதின்மூன்று ஆண்டுகளாகத்தான் இருக்கவேண்டும்” என்ற வழக்கும் ஓடியது. கீழடியில் பெருந்தமிழர் நாகரிகம் செழித்து வளர்ந்திருக்கும் நிலைமையைக் காண்கையில் காரவேலன் கல்வெட்டு கூறுவது பதின்மூன்று நூற்றாண்டுகளாகவே இருக்க வேண்டும்.

6. வைகை ஆறு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு பேராறாக நிறைந்து ஓடியிருக்க வேண்டும். அதன் கரைவெளி எங்கும் பாண்டியப் பேரரசில் பெருவாழ்வு வாழ்ந்த குடிகளின் தடயங்களைக் கண்டெடுத்திருக்கிறோம்.

7. எழுத்துமுறை தோன்றுவதற்கு முன்பே பல்லாயிரம் ஆண்டுகளாகப் பேச்சுமுறை நிலவியிருக்க வேண்டும். மொழித்தோற்றத்தின் இளமைக் காலம் இன்னும் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்லும்.
அனைத்தையும் கொண்டு கூட்டிப் பார்க்கையில் தமிழ் மொழியின் தொன்மையைப் பகரும் சான்றுகள் பல பல்லாயிரம் ஆண்டுகட்கு முந்தியவை என்பது தெளிவாக நம் கண்ணுக்கே தெரிகிறது.

8. கீழடியில் தங்க அணிகள் கிடைத்திருக்கின்றன. தொலைவுத் தேயங்களிலிருந்து வருவிக்கப்பட்ட மணிகள் கிடைத்திருக்கின்றன. மண்ணைக் கொண்டு பாண்டங்கள் செய்தல் என்னும் தொழில்நுட்பம் சிறப்படைந்திருக்கிறது. இருப்புப் பொருள்களும் பல்வேறு மாழைப் பொருள்களும் (உலோகம்) பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன. தனிப்பான்மையான குடிவாழ்வின் தன்னிகரற்ற வரலாற்று வளர்ச்சி நிலைகள் இவை.

9 இன்றைய நிலைப்பாட்டிலிருந்து வரலாற்றினைப் பார்ப்பது தவறு. மதங்கள், சாதிகள், பழக்கவழக்கங்கள், பண்பாடுகள் என இன்று நாம் பற்றிப் பழகியிருக்கும் சிறுகண்களைக்கொண்டு பழைமையில் தேடுவது நன்றன்று. ஒற்றை நிலையில் ஒரு நிலத்தின் வரலாறும் அமையாது. காலப்போக்கில் அது பல்வேறு நிலைகளுக்கு முகங்கொடுத்தாக வேண்டும். நம் வரலாறெங்கும் அவ்வாறே நிகழ்ந்தது. எது எப்படியாயினும் அன்றைக்கும் இன்றைக்கும் இக்குடிவாழ்வின் பற்றுதலாக இருப்பது ஒன்றேயொன்று. அதுதான் முன்னைப் பழையதும் பின்னைப் புதியதுமான தமிழ்மொழி !

No comments:

Post a Comment