Friday, April 18, 2014

திருச்சி மகாத்மா காந்தி மருத்துவமனையில் ரூ. 60.94 கோடியில் உயர் சிறப்பு சிகிச்சை மையம் திறப்பு

 First Published : 22 February 2014 12:18 AM IST தினமணி 
திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ. 60.94 கோடியில் கட்டப்பட்ட உயர்சிறப்பு மருத்துவச் சிகிச்சை மையத்துக்கான 6 மாடிக் கட்டடத்தை முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
  தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிகராக திருச்சி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து, போராட்டங்கள் நடைபெற்ற போது, அதற்கான திட்டம் சேலத்துக்கும், மதுரைக்கும் கைநழுவிச் சென்றது.
  இந்த நிலையில் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் மாநில அரசு நிதியில் இருந்து ரூ. 100 கோடியில் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் உயர் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
  அதன் தொடர்ச்சியாக ரூ. 60.94 கோடியில் 12 சிறப்புப் பிரிவுகளுடன் கூடிய 6 மாடிக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, உள்கட்டுமான உபகரணங்களும் வாங்கப்பட்டன. மேலும் ரூ. 45 கோடியில் மருத்துவ உபகரணங்கள் வாங்கப்படவுள்ளது.
  இந்த நிலையில், நவீன முறையில் அமைக்கப்பட்ட இந்தக் கட்டடத்தை முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
  அப்போது, திருச்சி மருத்துவமனை வளாகத்தில் அரசுத் தலைமைக் கொறடா ஆர். மனோகரன், மாவட்ட ஆட்சியர் ஜெயசிறீ முரளிதரன், எம்எல்ஏ மு. பரஞ்ஜோதி, மேயர் அ. ஜெயா, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பொ. கார்குழலி, துணை முதல்வர் டாக்டர் எம்.ஏ. அலீம், கண்காணிப்பாளர் டாக்டர் கனகசுந்தரம் உள்ளிட்டோர் நோயாளிகளுக்கும், மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் இனிப்பு வழங்கினர்.

No comments:

Post a Comment