Saturday, February 15, 2014

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி போக்குவரத்து தொழிலாளர்கள் ரத்த தானம்

http://www.dailythanthi.com/

பதிவு செய்த நாள் : Feb 15 | 03:15 am

திருச்சியில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி ஆயிரக்கணக்கான போக்குவரத்து தொழிலாளர்கள் ரத்ததானம் செய்தனர். கின்னஸ் சாதனைக்காக ரத்ததானம் செய்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ரத்த தான முகாம்

முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் 66–வது பிறந்த நாள் வருகிற 24–ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

திருச்சி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று காலையில் இருந்து மாலை வரை ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி ரத்ததான முகாம் நடைபெற்றது. அமைச்சர் பூனாட்சி முகாமை தொடங்கி வைத்தார். அரசு தலைமை கொறடா மனோகரன், சிவபதி எம்.எல்.ஏ, கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன், அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளர் ரவிவர்மா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கின்னஸ் சாதனைக்காக...

முகாமில் திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி மண்டலங்களை சேர்ந்த அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் ரத்ததானம் செய்தனர். இதே போல் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்களும் ரத்ததானம் செய்தனர். ரத்ததானம் செய்த அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதன் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் கார்குழலி, துணை முதல்வர் அலீம் ஆகியோர் தலைமையில் 15–க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் ரத்தம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒவ்வொரு குழுவிலும் 13 பேர் இருந்தனர். இங்கிலாந்து நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டு இருந்த ஒரு டாக்டர் முன்னிலையில் ரத்ததான முகாம் காட்சிகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன. ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் ரத்த தானம் செய்ததால் இதனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற செய்வதற்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Advertisement

No comments:

Post a Comment