மணப்பாறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைத்திடுக...!
பொதுமக்களின் பல ஆண்டு கோரிக்கையை அரசு செவிமடுக்க வேண்டும்.
திருச்சி மாவட்டத்திற்கு உள்பட்ட முதன்மையான ஊர் மணப்பாறை. திருச்சி மாவட்டம் என்றாலே காவிரி நதி பாய்ந்தோடும் வளமிக்க மாவட்டம் எனப்பொருள்படும்.
ஆனால், காவிரிக்கு தொடர்பில்லாத மிகவும் வறட்சியான பகுதி மணப்பாறை தொகுதியாகும். மணப்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து தற்சமயம் குடிநீருக்கே மக்கள் அல்லல்படும் நிலை உள்ளது.
மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் மணப்பாறை நகராட்சி, மணப்பாறை ஒன்றியம், வையம்பட்டி ஒன்றியம், மருங்காபுரி ஒன்றியம், துவரங்குறிச்சி உள்ளடங்கிய பொன்னம்பட்டி பேரூராட்சி ஆகியவை மணப்பாறை தொகுதியில் வருகிறது.
இதில், மணப்பாறை வட்டம், மருங்காபுரி வட்டம் என இரண்டு வட்டங்கள் உள்ளன. மிகப்பெரிய ஒன்றியமான மருங்காபுரி ஒன்றியத்தை இரண்டு ஒன்றியங்களாக பிரிக்க வேண்டும்.
மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை சட்டமன்றத் தொகுதி, திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை சட்டமன்றத் தொகுதி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி இம்மூன்றையும் சேர்த்து மணப்பாறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாகவும், வறட்சி மாவட்டமாகவும் அறிவித்து பல்வேறு தொழில் சாலைகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றோம்.
ஏற்கனவே, கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் மணப்பாறை, விராலிமலை, வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றது. பூகோள அடிப்படையிலும், மக்களின் உறவு வழி அடிப்படையிலும் இம்மூன்று தொகுதி மக்களும் நல்ல தொடர்பில் உள்ளதாலும், புதிய மாவட்டம் உருவாவதை மக்கள் பெரிதும் விரும்புவார்கள்.
ஆகவே, தமிழக முதல்வர் விரைவில் தென்காசி தனி மாவட்டம் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். அதைப்போலவே, மணப்பாறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைந்திட அறிவிப்பு செய்திட வேண்டும்.
விராலிமலை சட்டமன்ற உறுப்பினராகவும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராகவும் உள்ள டாக்டர் விஜயபாஸ்கர் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரி ஜோதிமணி அவர்களும் மணப்பாறை புதிய மாவட்டம் பெற்றுத்தரும் முயற்சியில் ஈடுபடவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
இதுதொடர்பாக மக்களை ஆயத்தப்படுத்தும் பணிகளில் விரைவில் ஈடுபடுவோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
-M.A.Aleem
No comments:
Post a Comment