தினத்தந்தி சென்னை 6.11.2017
செய்திகள்
மாநில செய்திகள்
இன்று பவள விழா: ‘தினத்தந்தி’க்கு வாழ்த்து மழை பொழிகிறது
இன்று பவள விழா: ‘தினத்தந்தி’க்கு வாழ்த்து மழை பொழிகிறது
‘தினத்தந்தி’ பவள விழாவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நவம்பர் 06, 2017, 05:00 AM
சென்னை,
‘தினத்தந்தி’ பவள விழாவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
மத்திய இணை-மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்:-
தமிழ் நாளிதழ் வரலாற்றில் பவளவிழா அரங்கேற்றத்தை கொண்டாடும் தினத்தந்திக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள். 75 ஆண்டுகளுக்கு முன்னால் அய்யா சி.பா.ஆதித்தனாரால் தமிழ் வளர்த்த மதுரையில் தொடங்கப்பட்ட தினத்தந்தி, இன்றைக்கு 17 நகரங்களில் அச்சடிக்கப்பட்டு தமிழ் மக்களுக்கு செய்தி சேவை செய்து வருவது பாராட்டுக்குரியது.
வெல்க தமிழ் எனும் முத்திரை வாக்கியத்துடன் வலம் வரும் தினத்தந்தியின் பவளவிழாவில், பிரதமர் தலைமையேற்று சிறப்பிப்பது தந்தி நாளிதழுக்கு மட்டுமல்ல, தமிழ் சமுதாயம் முழுமைக்குமே கிடைத்த முழு மரியாதை. பவள விழா கொண்டாடும் தினத்தந்தி குடும்பத்தார், தமிழ் சமுதாயத்துக்கு மேலும் பல தலைமுறைகளுக்கு பணியாற்றி நூற்றாண்டை கடந்து, மேலும் விழாக்களை காண அன்னை சக்தி அருள் புரிய வேண்டி பிரார்த்திக்கிறேன்.
பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்:-
தத்தி தத்தி வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு கூட புரியும் அளவிற்கு பத்திரிகை செய்தி தருவதும் தினத்தந்தி தான். பாமரனுக்கும் பிடிக்கும் அளவிற்கு அதை படிக்க படிக்க செய்தி தருவதும் தினத்தந்தி தான். காலையில் தேநீர் இல்லாமல் கூட இருந்து விடலாம். ஆனால் தினத்தந்தி படிக்காமல் இருக்க முடியாது என்ற அளவில் ஒவ்வொருவரின் வாழ்விலும் இரண்டற கலந்ததும் தினத்தந்தி தான்.
பத்திரிகை உலகில் பறந்து விரிந்து புகழ்பெற்ற தந்தி இன்று ஒளிபரப்பிலும் புகழ் பெற்றுக்கொண்டிருப்பது மகிழ்ச்சி, அய்யா ஆதித்தனார், சின்ன அய்யா சிவந்தியார் வழியில் இன்று இளையவர் பாலசுப்பிரமணியன் ஆதித்தனார், வாழையடி வாழையாக தமிழை வளர்த்து ஆல் போல் தழைத்த தரணியெங்கும் விழுதுகள் பதித்து இருக்கும் தினத்தந்தி பவள விழாவில், பிரதமர் பங்கேற்பது சிறப்பிற்கு சிறப்பு சேர்க்கும் இத்தருணம் இனி பிறக்கப்போகும் குழந்தைக்கும் தமிழ் சேவையை தினத்தந்தி தொடர்ந்து செய்யும் என்ற வரலாற்றை படைக்கும் தருணம் இப்பவளவிழா. தமிழக பா.ஜ.க. சார்பில் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர்:-
விடுதலைப் போராட்டக் காலத்தில் 1942-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி சி.பா.ஆதித்தனாரால் தொடங்கப்பட்ட ‘தினத்தந்தி’ நாளேடு 75 ஆண்டுகளை கடந்து பவள விழா கொண்டாடுவது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மெத்தப்படித்த மேட்டுக்குடியினர் மட்டுமே படித்துவந்த பழக்கத்தை மாற்றி சாதாரண சாமானிய, ஏழை, எளிய மக்களும் நாளேட்டை நாள்தோறும் படிக்கிற வகையில் தினத்தந்தியை தொடங்கி வாசகர்களை உருவாக்கி சமூக புரட்சி செய்து சாதனை படைத்தவர் சி.பா.ஆதித்தனார். அவரது கடுமையான உழைப்பின் மூலம் தமிழர்களின் அடையாளமாக தினத்தந்தி இன்றைக்கு விளங்கி வருகிறது.
உலகத்தில் வாழ்கின்ற 8 கோடி தமிழர்களும் பெருமிதம் கொள்கிற வகையில் பவள விழா கொண்டாடுகிற தினத்தந்தி நிர்வாகத்தினரையும், ஆசிரியர் குழுவையும் மனதார பாராட்டுகிறேன். வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வருகிற ‘தினத்தந்தி’ மேலும் சாதனைகளை படைத்து வெற்றிகளை குவிக்கட்டும் என மனதார வாழ்த்துகிறேன்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-
தமிழர் தந்தை என்று போற்றப்பட்ட சி.பா.ஆதித்தனாரால் தொடங்கப்பட்ட ‘தினத்தந்தி’ நாளிதழ் பவள விழா கொண்டாடுவதையும், அவ்விழா இன்று சென்னையில் நடைபெறுவதையும் அறிந்து பெருமகிழ்ச்சியடைந்தேன். தமிழ்நாட்டின் வரலாற்றுடன் இணைந்து, வளர்ந்து பிரிக்க முடியாத பந்தத்தை ஏற்படுத்தியுள்ள ‘தினத்தந்தி’ நாளிதழுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் இதழியல் சாம்ராஜ்யத்தை ‘தினத்தந்தி’ ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. ‘தினத்தந்தி’யை செய்தித்தாள் என்று கூறுவதைவிட பாடநூல் என்று கூறுவதே பொருத்தமானதாக இருக்கும். தமிழ்நாட்டில் உள்ள பாமரர்களுக்கும் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி, அவர்களை எழுத்துக்கூட்டி படிக்க வைத்த சிறப்பு தினத்தந்திக்கு உண்டு. இது சாதாரணமாக சாத்தியமாகிவிடவில்லை. சி.பா.ஆதித்தனாரின் திட்டமிட்ட உழைப்பு மற்றும் உத்தி காரணமாகவே சாத்தியமானது. பவள விழா என்ற மைல்கல்லை ‘தினத்தந்தி’ நாளிதழ் மலர்ப்பாதை வழியாக கடந்து விடவில்லை. அது முட்கள் நிறைந்த பாதை வழியாகவே சாதனைப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் எந்த பகுதிக்கும் 2 மணி நேரத்தில் சென்றடையும் வகையில் தமிழகத்தில் மட்டும் 13 இடங்களில் இருந்து ‘தினத்தந்தி’ அச்சிடப்படுகிறது. இதன்மூலம் மிக அண்மைச் செய்திகளைக்கூட ‘தினத்தந்தி’யால் வழங்க முடிகிறது. இது வேறு எந்த இதழுக்கும் இல்லாத சிறப்பாகும். பவள விழா என்ற மைல்கல்லை 17 பதிப்புகளுடன் எட்டிப்பிடித்துள்ள ‘தினத்தந்தி’, அதன் நூற்றாண்டு விழாவை உலகெங்கும் 50 பதிப்புகளுடன் கொண்டாட வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்து வாழ்த்துகிறேன்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:-
தினத்தந்தி நாளிதழ் சி.பா.ஆதித்தனாரால் உருவாக்கப்பட்டு, அவருடைய மகன் பா.சிவந்தி ஆதித்தனரால் வழிநடத்தப்பட்டு, மூன்றாவது தலைமுறையாக சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தனாரால் சிறந்தமுறையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட நாளிதழாக தினத்தந்தி விளங்கி வருகிறது. 75-வது ஆண்டில் பவள விழா காணும் தினத்தந்தி குடும்பத்துக்கும், நிர்வாகத்துக்கும், ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் தினத்தந்தி நூற்றாண்டு விழாவை காணவேண்டும் என மனமார வாழ்த்துகிறேன்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ:-
கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த பைந்தமிழுக்கு உயிரைத் தருவேன் என தரணி போற்ற வாழ்ந்த பெருமகனார், கடல் அலைகள் தாலாட்டும் திருச்சீரலைவாய் மருங்கில் காயாமொழி என்ன கன்னல் தமிழ்ப் பெயர் கொண்ட மூதூரில் தோன்றிய தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் காய கல்பமாய், கற்பகத் தருவாய், ஜனநாயகத்தின் மூச்சுக் காற்றாய் பத்திரிகை உலகத்துக்கு வழங்கிய மரகத மணிப் பேழையாம் ‘தினத்தந்தி’ நாளிதழ் வெள்ளி விழா கண்டு, பொன் விழா ஆரம் தாங்கி, பவள விழா மகுடம் ஏந்தும் விழா இன்று தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் புகழ் மணக்கும் விழாவாய் ஒளிவீச இருக்கிறது.
1961-ம் ஆண்டு தமிழ் தினசரிகளில் அதிக அளவில் விற்பனை என்ற பெருமையைப் பெற்று, 56 ஆண்டுகளாக அதனைத் தக்க வைத்துக் கொண்டு இருப்பது மட்டுமல்ல, இன்றைக்கு உபகண்டத்திலேயே அதிக அளவில் விற்பனையாகும் நாளிதழாகவும் இமாலய சாதனை படைத்துவிட்டது ‘தினத்தந்தி’.
1959-ம் மே 2-ம் நாள் சி.பா.ஆதித்தனாரின் திருப்புதல்வர் சிவந்தி ஆதித்தனார் ‘தினத்தந்தி’யின் பொறுப்பை கவனிக்க துவங்கினார். ரெயிலில் தானே பார்சலை ஏற்றச் சென்றதும், அலுவலகத்தில் ஊழியர்களுக்கான உடையையே தாமும் அணிந்து பணியாற்றியதும் சிவந்தி ஆதித்தனார் ஈட்டிய வெற்றிக்கு இலக்கணங்கள்.
தன் தந்தையின் கனவுகளை நனவாக்கிய சிவந்தி ஆதித்தனார் தூக்கித் தந்த ‘தினத்தந்தி’ எனும் ஒளிமணிச் சுடரை மேலும் பிரகாசிக்கச் செய்யும் வகையில், அவரது புதல்வர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன் முன்னெடுத்து செல்கிறார். வாழையடி வாழையாக ‘தினத்தந்தி’யின் வான்புகழ் உயர்த்தும் குடும்பமாக சி.பா.ஆதித்தனாரின் குடும்பம் திகழ்கிறது. ஜனநாயகத்தின் சுவாசமான ‘தினத்தந்தி’ பல நூற்றாண்டு விழாக்களைக் கொண்டாடும். தமிழ்கூறும் நல்லுலகில் காலத்தால் அழியாத பொன்னேடாய் புகழ் குவிக்கும்.
அ.தி.மு.க. (அம்மா) துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்:-
கடந்த 75 ஆண்டுகளாய் தமிழர்களின் தனித்த அடையாளமாகவே ‘தினத்தந்தி’ நாளிதழ் திகழ்ந்து வருகிறது. தமிழ் பத்திரிகை உலகின் சிற்பி சி.பா.ஆதித்தனாரால் 1942-ம் ஆண்டு மதுரையில் இருந்து தொடங்கப்பட்டு பின்னர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனின் கடின உழைப்பால் பொலிவு பெற்று, இன்று பாலசுப்பிரமணியன் ஆதித்தனின் சீரிய தலைமையில் செயல்பட்டு வரும் ‘தினத்தந்தி’ நாளிதழ் பவள விழா காண்பது உள்ளபடியே நம் அனைவருக்கும் பெருமகிழ்ச்சியை அளிக்கிறது.
இந்திய துணைக்கண்டத்தில் பத்திரிகை உலகில் தனித்த அடையாளத்துடன் மிகப்பெரிய வாசகர் வட்டத்தைக் கொண்டு இனிய தமிழில் ‘தினத்தந்தி’ நாளிதழ் தமிழர்களின் நம்பிக்கைக்குரிய நாளேடாகத் திகழ்கிறது. கலை, இலக்கியம், அறிவியல், அரசியல், சமூகம், ஆன்மிகம், விளையாட்டு என அனைத்துத் துறைகளைச் சார்ந்த செய்திகளை வெளியிட்டு, இன்று ஆன்றோர், இளைஞர், மங்கையர், பாலகர் என அனைத்துத் தரப்பினரும் விரும்பும் நாளிதழான ‘தினத்தந்தி’ நாளிதழ் பவள விழா கொண்டாடும் இத்தருணத்தில், இந்நிறுவனத்தின் சாதனைக்கு வித்திட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்து, ‘தினத்தந்தி’ நாளிதழ் மென்மேலும் பல சாதனை விழாக்களை காண, கழகத்தின் சார்பில் நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:-
‘தினத்தந்தி’ நாளிதழுக்கு பவள விழா எடுப்பது மிகவும் சிறப்புக்குரியது. இது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. தமிழகம் முழுவதும் வெளிவரும் நாளிதழ்களில் முதல் இடத்தில் தொடர்ந்து சிறப்பாக வெளிவந்து கொண்டிருக்கும் நாளிதழ் ‘தினத்தந்தி’ தான். நாளிதழ் தொடங்கியது ‘தினத்தந்தி’ குடும்பம் என்று பெருமையோடு கூறலாம். உலகத் தமிழர்கள் மத்தியில் ‘தினத்தந்தி’ நாளிதழுக்கே முதன்மையான இடம் இருப்பது பெருமைக்குரிய ஒன்று.
சி.பா.ஆதித்தனார் தொடங்கிய ‘தினத்தந்தி’ நாளிதழ் சிறப்பாக தொடர்ந்து வெளிவருவதற்கு காரணமான சிவந்தி ஆதித்தனார், பாலசுப்பிரமணியன் ஆதித்தனார், அவரது மகன் சிவந்தி ஆதித்தனார் என ஆதித்தனாரின் குடும்பத்தாரும் மற்றும் நாளிதழின் ஆசிரியர்கள், நிருபர்கள் உள்பட அனைத்து பணியாளர்களும் ‘தினத்தந்தி’ நாளிதழின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலே, மகுடம் சூட்டும் வகையிலே 75-வது பவள விழாவை நடத்துவது போற்றுதலுக்குரியது, பாராட்டுக்குரியது.
பவள விழா காணும் ‘தினத்தந்தி’ நாளிதழ் உலகத் தமிழர்களிடையே மேலும் பிரபலமாக உயர, வளர, சிறக்க த.மா.கா. சார்பில் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி:-
நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் ‘தினத்தந்தி’யை, இவ்வளவு தூரம் வெற்றிகரமாக நடத்திய பெரு முயற்சியைக் கண்ட தமிழ்க் குல ஏட்டுலகச் சாதனைத் தகைமையாளர் சி.பா.ஆதித்தனாரின் இந்த சாதனைக்காக எப்படிப் பாராட்டினார் தெரியுமா?. ‘பத்திரிகைத் துறையில் செயற்கரிய செய்த பெரியார்’ என்றே குறிப்பிடுவதைவிட, ‘தினத்தந்தி’க்கு அதன் 75-ம் ஆண்டு பவள விழா ஆண்டில் வேறு என்ன வாழ்த்து, விருது தேவை?.
‘விடுதலை’க்கும், ‘தினத்தந்தி’க்கும் உள்ள உறவு பக்கத்து வீட்டு உறவு என்பதைவிட, தமிழின உணர்வு, உறவும் பலமானது. எது எங்களைப் பிரிக்கிறது என்பது முக்கியமல்ல. எது எங்களை இணைக்கிறது என்பதே முக்கியம். முதன் முதலில் சிங்கப்பூரில் இருந்து தமிழகம் வந்து பத்திரிகை தொடங்க, முதல் வாழ்த்தை சாதனையாளர் சி.பா.ஆதித்தனார் தந்தை பெரியாரிடம் தான் திருக்கழுக்குன்றம் மாநாட்டிற்கு நேரில் சென்று பெற்றார் என்பது மறக்க முடியாத வரலாறு.
‘தினத்தந்தி’ குடும்பத்தினருக்கு, ஆசிரியர் மற்றும் பெருக்கும் விற்பனையாளர் உள்பட நமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். வாழ்க ‘தினத்தந்தி’, வளர்க அதன் சாதனைகள்.
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன்:-
பாமரனையும் பத்திரிகை படிக்கும் பழக்கத்துக்கு கொண்டுவந்த பெரிய அய்யா சி.பா.ஆதித்தனார் தொடங்கிய தினத்தந்தியின் பவளவிழா, ஒவ்வொரு தமிழனும் பெருமிதத்துடன் போற்றும் விழா.
இதில் நானும் கலந்துகொண்டு மகிழும் பேறு பெற பெரிதும் விரும்பினேன். ஆனால் ஆஸ்பத்திரியில் இருப்பதால் மன கண்களால் பார்த்து இதய துடிப்புகளால் வாழ்த்துகிறேன். தினத்தந்தி மேலும் மேலும் வளர்ந்து எங்கும் எப்போதும் மங்கா புகழ் பெறும்.
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்:-
‘தினத்தந்தி’ நாளிதழ் பவள விழா காண்பது குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தமிழ்நாடு மாநிலக்குழு தனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதுடன் மென்மேலும் வளர்ந்தோங்க வாழ்த்துகள்.
ஏராளமான நாளிதழ்கள் வந்தபோதும், தமிழில் எழுத்துக்கூட்டி, படித்த பாமர மக்களிடத்தில் நாளேடு படிக்கும் பழக்கத்தை உருவாக்கி சாதனை படைத்திட்ட நாளிதழாகும் தினத்தந்தி. பாமர மக்களாலும் நாளிதழ்களை படிக்க இயலும் என்ற நிலையை உருவாக்க காரணமாக இருந்தது ‘தினத்தந்தி’ நாளிதழ் தான் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்றல்ல.
எளிய தமிழில் ஏராளமான செய்திகளை வழங்கி வரும் நாளிதழ் ‘தினத்தந்தி’ 75-ம் ஆண்டில் பவள விழா காண்பது மகிழ்ச்சிக்குரியது.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார்:-
‘காலை எழுந்தவுடன் தந்தி’ என்று கரங்களில் ‘தினத்தந்தி’ நாளிதழுக்காக விடியலை எதிர்நோக்கிக் காத்திருக்கும் தமிழ்ச் சமுதாயத்தோடு இரண்டறக் கலந்துவிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழ், இன்று பவள விழா கொண்டாடுகிறது என்றதும், நமக்கெல்லாம் பெருமைமிகு பிரமிப்பும், பேருவகையும் ஏற்படுகிறது.
வானொலியைத் தவிர செய்திகள் அறிந்து கொள்ள வேறு ஊடகங்கள் இல்லாத காலக்கட்டத்தில் இருந்து, தொலைக்காட்சி, இணையதளம், சமூக வலைத்தளங்கள் என ஊடகங்கள் பல்கிப் பெருகியிருக்கும் இன்றைய காலம் வரை, நாளிதழாக வெளிவந்து பட்டித்தொட்டி எங்கும் செய்திகளைக் கொண்டு சேர்க்கும் சேவையில் முன்னோடியாக விளங்கிக் கொண்டிருக்கிறது ‘தினத்தந்தி’.
இன்று பவள விழா காணும் ‘தினத்தந்தி’, நூற்றாண்டு விழாவும் கண்டு, மேலும் பல நூறு ஆண்டுகள் கடந்து, தமிழ் கூறு நல்லுலகு உள்ள வரை, மேன்மேலும் தழைத்தோங்கிட வேண்டும் என்று ‘தினத்தந்தி’ குடும்பத்தில் ஒருவன் என்ற வகையில் என் பிரார்த்தனையையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி:-
பாட்டுக்கொரு புலவன் பாரதியின் ரசிகன் நான். அதனால் எனக்குத் தமிழும், ‘தினத்தந்தி’ நாளிதழும் ஒன்றுதான். 3 வகையில் நான் ‘தினத்தந்தி’ நாளிதழுக்கு வாழ்நாள் கடமைப்பட்டுள்ளேன். பள்ளிப் பருவத்தில் எனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தவர் ஆசிரியர் பொன்னையா என்றால், தமிழ் மீது எனக்கு ஆர்வத்தை தூண்டி பேச்சாளனாக, கட்டுரையாளனாக உயர்த்தியது ‘தினத்தந்தி’ நாளேடு தான்.
அரசியலில் என்னை அறிமுகப்படுத்தியவர் எம்.ஜி.ஆர். என்றால், என் அரசியல் வாழ்க்கையில் திருப்புமுனை நிகழ்வதற்குக் காரணமாக இருந்தது ‘தினத்தந்தி’. மனிதநேய அறக்கட்டளை மூலம் கல்வி சேவை செய்து வந்தாலும், தகுதியான மாணாக்கர்களை எங்களுக்கு அடையாளம் காட்டியதுடன் நில்லாமல், எங்கள் சேவைகளை உலகறியச் செய்ததும் ‘தினத்தந்தி’ தான்.
‘தினத்தந்தி’ நாளிதழை எளிய மக்களும் படித்துப் பயன்பெறும் வண்ணம் உருவாக்கினார் சி.பா.ஆதித்தனார். அந்த நாளிதழை உலகத் தமிழர்களிடம் எல்லாம் கொண்டுபோய் சேர்த்தவர் பா.சிவந்தி ஆதித்தனார். நான் ஒவ்வொரு முறை தேர்தலில் போட்டியிடும்போதும், சிவந்தி ஆதித்தனாரிடம் ஆசிபெற்ற பிறகுதான் பிரசாரம் தொடங்குவது வழக்கம் எனும் அளவுக்கு எங்களுடைய நட்பு நிலவியது.
இப்போது ‘தினத்தந்தி’ நாளிதழை துபாயில் தொடங்கியது மட்டுமின்றி, வானொலி மற்றும் தொலைக்காட்சி துறையிலும் கால் பதித்து வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார் இன்றைய தினத்தந்தி இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன். ‘தினத்தந்தி’ பவள விழா கொண்டாட்டத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் நேரத்தில், இந்த உலகம் உள்ள வரையிலும் தமிழ் மொழி இருக்கும். தமிழ் மொழி இருக்கும் வரை ‘தினத்தந்தி’ நிலைத்திருக்கும் என்பதை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.
இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன்:-
தமிழக மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்த நடுநிலை நாளேடாக என்றும் தினத்தந்தி திகழ்வது பாராட்டுக்குரியது. தமிழை தமிழருக்கு கற்றுத்தந்து, பாமரனையும் உலக நடப்பு தெரிந்தவனாக ஆக்கிய பெரும் புரட்சியை தினத்தந்தி தனது தொடக்க காலத்தில் இருந்து செய்து வருவதை எண்ணிப்பார்க்கிறேன். ஒரு பத்திரிகை எப்படி இருக்கவேண்டும்? என்பதற்கு முன்மாதிரி, தினத்தந்தி.
தினத்தந்தியின் 3-ம் தலைமுறை நிர்வாகம் தனது பாட்டனாரின் கனவை நினைவாக்குவது பெருமிதம் கொள்ள வைக்கிறது. இந்த நன்னாளில் தினத்தந்தி முன்னோரின் பன்முகத்தன்மையை எண்ணிப்பார்க்கிறேன். ஊடகத்துறையில் தொடர்ந்து தினத்தந்தி வெற்றிநடை போட எல்லாம் வல்ல திருச்செந்தூர் செந்திலாண்டவரை வணங்கி ஆசீர்வதிக்கிறேன். தினத்தந்தி பவளவிழாவில் பிரதமர் கலந்துகொள்வது தினத்தந்தியின் புகழ் மகுடத்துக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. தினத்தந்தி குழுமம் மேலும் மேலும் பல வெற்றிகள் பெற்று தேசத்துக்கு தொண்டு செய்திட எனது வாழ்த்துகள்.
இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் தி.தேவநாதன் யாதவ்:-
தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று ‘தினத்தந்தி’
தமிழை தாய்மொழியாக கொண்டிராத பிறமொழிக்காரர்களும் ‘தினத்தந்தி’ படித்து தமிழ் எழுத படிக்க கற்றுக்கொண்டது சரித்திர சாட்சி. பாமரரும் புரிகிற விதமாக எளிய சொற்கள், சிறிய வாக்கியங்கள், கவர்ச்சிகரமான தலைப்புகள், கருத்துப்படங்கள் ‘தினத்தந்தி’யின் சிறப்பு அம்சமாகும்.
தமிழர் உணர்வுக்கும், வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்து வரும் ‘தினத்தந்தி’ நாளிதழின் பவள விழா தருணத்தில் இந்த ஆதித்ய பாரம்பரியம் 7 தலைமுறைக்கு மேலும் ஊடக துறையில் சிறந்து விளங்க வாழ்த்தி எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம்:-
பார்போற்றும் ‘தினத்தந்தி’ பவளவிழா காணும் சிறப்பான தினத்தில் சிந்தையெல்லாம் மகிழ்கிறது. சிந்தனையைத் தூண்டுகிறது. 63 ஆண்டுகளாகத் தினத்தந்தியுடன் தொடர்பு கொண்டு, இன்று பவள விழாவில் கலந்து கொண்டு தினத்தந்தி சாதனையாளர் விருதை பிரதமர் நரேந்திரமோடியின் திருக்கரங்களால் பெறுவது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.
பாமர மக்களும் படித்து பயன்பெறும் அற்புதமான நாளிதழ் நம் தினத்தந்தி. உள்ளம் மகிழும் இந்த நல்ல வேளையிலே, எனது உணர்வு அலைகள் மூலமாக அருட் பெட்டகமாக, அன்பிற்கோர் இலக்கணமாகத் திகழும் ‘தினத்தந்தி’ வளர்வதற்கு வித்திட்ட தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரும் அவர் வழித்தோன்றல் அமரர் சிவந்தி ஆதித்தனாரும் கட்டிக் காத்துவரும் பெருமைமிக்க தினத்தந்தியின் வாரிசான அதிபர் இளவல் பாலசுப்பிரமணியன் ஆதித்தனாரால் சிறப்புடன் நடைபெற்று வருகின்றது. ‘தினத்தந்தி’ நாளிதழும், தொலைக்காட்சியும் மென்மேலும் வளர இறைவன் அருள்தர வேண்டும் எனவும், பவள விழாவில் பங்குபெறும் அனைவருக்கும் என் அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கவிஞர் பொன்னடியான்:-
‘தினத்தந்தி’ தமிழ் - தமிழர்தம் மேம்மைக்குரிய அடையாளமாகிவிட்ட நாளேடு. மூத்த தலைமுறைக்கு மட்டுமல்லாது இன்றைய இளைய தலைமுறைக்கும் வாழ்வியல் பாடங்களைக் கற்பித்து, வழி நடத்தும் ஏடாகவும் ‘தினத்தந்தி’ உள்ளது.
தங்களின் புகழ்மிகு முன்னோர்கள் வழியில் இன்றும் பாடுபட்டிருக்கும் இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தனுக்கும், பலதுறை நிர்வாகிகளுக்கும், மேலாளர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் ‘முல்லைச்சரம்’ நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை கூறி மகிழ்கிறது.
கேப்டன் டி.வி. நிர்வாக இயக்குனர் எல்.கே.சுதீஷ்:-
எளிய தமிழை எல்லா மக்களிடமும் கொண்டு சேர்த்த பெருமை ‘தினத்தந்தி’க்கு மட்டுமே உரிய சிறப்பாகும். பாமர மக்களிடத்தில் படிக்கும் ஆர்வத்தை உண்டாக்கி, அவர்களின் சொல்லாக, இன்றும் அதே எழுச்சி குறையாத 75 ஆண்டுகள் என்ற இமாலய ஏணிப்படிகளில் நிற்கிறது ‘தினத்தந்தி’.
தமிழ் கற்க நினைக்கும் மாற்று மாநிலத்தவர்களுக்கும் ஒரு ஆசானாய் விளங்குகிறது. தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக ஜனநாயக கடமையாற்றி வரும் ‘தினத்தந்தி’யின் சேவை பெருமைக்குரியது. தமிழ் உள்ளவரை தமிழ் மக்கள் உள்ளவரை ‘தினத்தந்தி’யின் சேவை தொடர வாழ்த்துகிறேன்.
இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர்:-
எளிய தமிழ், இனிய நடை, சுருக்கமான வரிகள் என்கிற புதிய உத்தியை தமிழ் பத்திரிகை உலகில் அறிமுகப்படுத்தி, மாபெரும் அறிவுப்புரட்சியை ஏற்படுத்தியவர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்.
இந்த அளப்பறிய சாதனையை நிகழ்த்திக் காட்டிய சி.பா.ஆதித்தனாரின் விடாமுயற்சியால் தொடங்கப்பட்ட ‘தினத்தந்தி’ இன்று 75 ஆண்டுகளை நிறைவு செய்து பவள விழா கொண்டாடுகின்றது. தமிழ்நாட்டிற்கான தேவைகள், உரிமைகள் ஆகியவற்றைப்பெற, அதற்கான காரண காரியங்களை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் தினத்தந்தியின் தார்மீகக் கடமை என்றும் தொடர வேண்டும் என இப்பவள விழா நன்னாளில் வாழ்த்தி மகிழ்கின்றேன்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி:-
தமிழர் தந்தை என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்படும் சி.பா.ஆதித்தனாரால், 1942-ம் ஆண்டு மதுரையில் ஆரம்பிக்கப்பட்டு, தமிழகம் தாண்டி இந்தியாவின் பெருநகரங்களிலும், வளைகுடா நாடான துபாயிலும் தடம் பதித்து, பவள விழாவை கண்டுள்ள ‘தினத்தந்தி’ நாளிதழுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த மகிழ்ச்சிகரமான தருணத்தில், தினத்தந்தி நாளிதழின் இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தனுக்கும் அதன் ஆசிரியர், செய்தி ஆசிரியர்கள், நிருபர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாடு, புதுச்சேரி மூளை நரம்பியல் கழக தலைவர் டாக்டர் எம்.ஏ.அலீம்,
சென்னை பத்திரிகையாளர் சங்க தலைவர் வி.அன்பழகன், அம்பேத்கர் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மத்தியாஸ் என்ற சீனிவாசன் உள்ளிட்டோரும் ‘தினத்தந்தி’ பவள விழாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment