Monday, July 8, 2013

இந்திய மருத்துவ கவுன்சிலின் மதிப்பீட்டாளர் திருச்சியில் ஆய்வு

திருச்சி: இந்திய மருத்துவ கவுன்சிலின் மதிப்பீட்டாளர், திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக்கல்லூரியில் திடீர் ஆய்வு நடத்தினார். திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையிலும், கி.ஆ.பெ., விஸ்வநாதம் அரசு மருத்துவ கல்லூரியிலும், அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் மதிப்பீட்டாளர் டாக்டர் சுப்பாராவ் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். மருத்துவக்கல்லூரியின் அனைத்து இடங்கள், அரசு மருத்துவமனையின் அனைத்து இடங்களையும் ஆய்வு செய்த சுப்பாராவ், நோயாளிகள், மருத்துவ கல்லூரி மாணவர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் குறைகளை கேட்டறிந்தார். அவருடன் அரசு மருத்துவமனை ஆர்.எம்.ஓ., சிவக்குமார், நரம்பியல் துறை தலைவர் டாக்டர் அலீம் ஆகியோர் உடன் சென்றனர். அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு குறித்து, அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் மதிப்பீட்டாளர் டாக்டர் சுப்பாராவ் நிருபர்களிடம் கூறியதாவது:
மாவட்ட அரசு மருத்துவமனைகளில், ஐந்தாண்டுக்கு ஒருமுறை அகில இந்திய மருத்துவ கவுன்சில் குழு ஆய்வு மேற்கொள்ளும். அப்போது கண்டறியப்படும் குறைபாடுகளை சரிசெய்ய மருத்துவ கவுன்சில் நடவடிக்கை எடுக்கும். அதன்படி, கடந்த, 2012ம் ஆண்டு திருச்சி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது நோயாளிகள், மாணவர்கள், ஊழியர்கள் தரப்பில் பல்வேறு குறைபாடுகள் கூறப்பட்டது. அதுகுறித்து மருத்துவ கவுன்சிலுக்கு அறிக்கை அளிக்கப்பட்டது. அறிக்கை அடிப்படையில் திருச்சி மருத்துவமனையில் உள்ள குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. அந்த அறிவுறுத்தலின்படி, இங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?, இன்னும் குறைபாடுகள் நீடிக்கிறதா? என்பதை ஆய்வு செய்யவே வந்துள்ளேன். ஆய்வில், சரிசெய்ய அறிவுறுத்தப்பட்ட குறைபாடுகள் சில நீடிப்பது தெரியவந்துள்ளது. அவைகுறித்து மருத்துவ கவுன்சிலுக்கு அறிக்கை அளிக்கப்படும். நோயாளிகளும் குறைகளை கூறியுள்ளனர். அவையும் மருத்துவ கவுன்சிலின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment