திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையம்
மீள்பார்வை - 2018
கடந்த நாட்காட்டி ஆண்டு 2018 ஆனது திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்திற்கு பல ஏற்றங்களையும், சில இறக்கங்களையும், சில ஏமாற்றங்களையும் தந்த ஒரு கலவையான ஆண்டாகவே இருந்தது.
சில எதிர்பார்ப்புகளையும் தள்ளிப்போகவே செய்தது.
இவைகள் பற்றிய ஒரு விரிவான பார்வை.
🛫 ஏற்றங்கள் 🛫
இந்தியாவின் முன்னணி விமானநிறுவனமான இண்டிகோ விமானநிறுவனம் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தை தனது 43வது உள்நாட்டு சேவை வழங்கும் விமானநிலையமாக அறிவித்து கடந்த ஜுன் 1ம் தேதிமுதல் சேவைகளைத் தொடங்கியது.
☑ திருச்சிராப்பள்ளி மற்றும் மெட்ராஸிற்கு இடையில் தினசரி 4 சேவைகள் என்ற அடிப்படையில் கடந்த ஜுன் 1 முதல் சேவைகளைத் தொடங்கியது.
☑ அதே ஜுன் மாதம் 28ம் தேதி தினசரி பெங்களூரு சேவையைத் தொடங்கியது.
☑ அதே ஜுன் மாதம் 28ம் தேதி தினசரி கொச்சி சேவையையும் தொடங்கியது.
இந்த அனைத்து சேவைகளிலும் இண்டிகோ விமானமானது 74 இருக்கைகள் கொண்ட ATR 72-600 வகை விமானத்தை இயக்குகிறது.
☑ ஏர் இந்தியாவின் துணை விமானநிறுவனமான அல்லையன்ஸ் ஏர் ஆனது கடந்ந ஆகஸ்ட்டு 1ம் தேதி முதல் தனது திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னைக்கு இடையிலான இரண்டாவது தினசரி சேவையைத் தொடங்கியது.
☑ செப்டம்பர் மாதம் மலிண்டோ ஏர் ஆனது தனது நிறுத்தப்பட்ட "திருச்சிராப்பள்ளி மற்றும் கோலாலம்பூருக்கான" இரண்டாவது சேவையை மீண்டும் தொடங்கியது.
☑ அதே செப்டம்பர் மாதம், இண்டிகோ விமானநிறுவனமானது தனது பனிரெண்டாவது பன்னாட்டு இந்திய விமானநிலையமாக திருச்சிராப்பள்ளியை அறிவித்து இங்கு தனது முதல் பன்னாட்டு விமானசேவையாக, திருச்சிராப்பள்ளி மற்றும் சிங்கப்பூருக்கு இடையில் சேவையைத் தொடங்கியது.
இந்த விமானசேவையானது, இண்டிகோ விமானநிறுவனத்தின் பன்னாட்டு சேவைகளில் குறிப்பிடத்தக்கவாறு வெற்றி பெற்றுள்ளது சிறப்பம்சமாகும்.
🛬 இறக்கங்கள் 🛬
⏺ தொழில்நுட்ப மற்றும் இயக்க ரீதியிலான காரணங்களுக்காக கடந்த செப்டம்பர் 28, 2017ல் ஆரம்பிக்கப்பட்ட, தாய் ஏர் ஏசியாவின் பாங்காக் டான் முயாங் மற்றும் திருச்சிராப்பள்ளிக்கு இடையாலான விமானசேவையானது கடந்த பிப்ரவரி 28 முதல் விலக்கிக்கொள்ளப்பட்டது.
⏺ கடுமையான முயற்சியில், கடந்த மார்ச் 25, 2018 முதல் ஆரம்பிக்கப்பட்ட, ஜெட் ஏர்வேஸின் பம்பாய் மற்றும் திருச்சிராப்பள்ளிக்கு இடையிலான நேரடி விமானசேவையானது, ஜெட் ஏர்வேஸின் நிதி நெருக்கடியால் கடந்த அக்டோபர் 28 உடன் விலக்கிக்கொள்ளப்பட்டது.
⏺ கடந்த ஏழு வருடங்களுக்கும் மேலாக திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தில் சேவை வழங்கிவந்த ஜெட் ஏர்வேஸ் விமானநிறுவனமானது தனது சேவைகள் அனைத்தையும் தனது சொந்த நிதிச்சுமை காரணங்களுக்காக விலக்கிக்கொண்டது.
✈ புதிய வரலாறுகள் ✈
🌐 திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையமானது வரலாற்றில் முதன் முறையாக 15 லட்சம் பயணிகளை கடந்த நிதி ஆண்டான 2017-18ல் கையாண்டது.
13,76,254 பன்னாட்டு விமானபயணிகளையும்,
1,38,030 உள்நாட்டு விமானபயணிகளையும்,
ஒட்டு மொத்தமாக 15,14,284 பயணிகளையும் கையாண்டு சாதனை படைத்தது.
🌐 கடந்த நவம்பர் 30ம் தேதியுடன் ஏர் ஏசியா விமானநிறுவனமானது வெற்றிகரமாக, தனது இந்தியாவின் முதல் விமானசேவை வழங்கிய திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தில் பத்தாண்டுகளை,
அதாவது கோலாலம்பூர் மற்றும் திருச்சிராப்பள்ளிக்கு இடையிலான வழித்தடத்தில் (01/12/2008 முதல் 30/11/2018 வரை) நிறைவு செய்து புதிய வரலாறு படைத்தது.
கடந்த 01/12/2008 அன்று கோலாலம்பூர் மற்றும் திருச்சிராப்பள்ளிக்கு இடையில் தினசரி சேவையத் தொடங்கியது. இன்றைய அளவில் இதே வழித்தடத்தில் வாரத்திற்கு 24 சேவைகளை வழங்குகிறது.
🛬 ஏமாற்றங்கள் 🛬
✖ கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் ஆகியும், திருச்சிராப்பள்ளி விமானநிலையம் மட்டுமல்ல, திருச்சிராப்பள்ளி மற்றும் சுற்றுப்புற 15 மாவட்டங்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்த உதவும், விமானநிலைய ஓடுதள விரிவாக்கத்திற்கு தேவையான நிலத்தை, தமிழகஅரசானது கையகப்படுத்தி, விமானநிலையங்கள் ஆணைக்குழுமம், திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்திடம் ஒப்படைக்காதது மிகப்பெரிய ஏமாற்றமாகும்.
நடப்பு ஆண்டிலாவது தமிழக அரசு நிறைவேற்றும் என நம்புவோமாக!
✖ மத்தியஅரசானது திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தில் "விரைவு அஞ்சல் ஏற்றுமதி சேவை - கூரியர் கார்கோ" தொடங்க கடந்த 2013லேயே அனுமதித்தும் இன்றுவரை சேவை தொடங்க, மத்திய அரசின் சுங்கத்துறையானது அனுமதிக்காதது மிகப்பெரிய ஏமாற்றமும் கண்டனத்திற்குரியதும் ஆகும்.
நடப்பு ஆண்டிலாது மத்திய அரசின் சுங்கத்துறை சேவை தொடங்கும் என நம்புவோம்!
🎯 புதிய மைல்கல் 🎯
🌐 இந்திய விமானநிலயங்கள் ஆணைக்குழுமமானது, திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தின் வளர்ச்சி மற்றும் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், இங்கு இந்தியாவின் இரண்டாம்நிலை நகரங்களின் விமானநிலையங்களின் முன்மாதிரி (Model) விமானநிலையமாக,
திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தினை தேர்ந்தெடுத்து புதிய பயணிகள் முனையத்தை கட்டும் பூர்வாங்க பணிகளைத் தொடங்கியுள்ளது.
இந்த புதிய பயணிகள் முனையத்தின் வடிவமைப்பை, இதற்கென்றே உள்ள உலகின் முன்னணி வடிவமைப்பாளரான "பாஸ்கல்+வாட்சன்" நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு,
அது கடந்த ஆண்டின் உலகளாவிய வடிவமைப்பிற்கான "வோர்ல்டு ஆர்கிடெக்சுரல் நியூஸ் அவார்டு - WAN Awards" என்ற போட்டியில் பங்கு பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய பயணிகள் முனையத்தின் பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் ஒருங்கிணைப்பு வேலைகளை, இதற்கெனவே பிரயத்யோகமாக உள்ள உலகின் முன்னணி நிறுவனமான, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த "ஈஜிஸ-egis" நிறுவனம் ஒருங்கிணைக்க உள்ளது.
அதேபோல் இந்த புதிய பயணிகள் முனையத்தின் கட்டுமானப் பணிகளை உலகின் முன்னணி சிறப்புக்கட்டுமானங்களுக்கான புகழ்பெற்ற, இத்தாலி மற்றும் தாய்லாந்து கூட்டு நிறுவனமான "ITD" நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 23ம் தேதி இதற்கான முப்பரிமாண படம் (Miniature) வெளியிடப்பட்டு, அதே மாதம் கட்டுமானப் பணிகளும் தொடங்கப்பட்டது.
வரும் அக்டோபர் 2021ற்குள் புதிய பயணிகள் முனையத்தின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
🌐 மெட்ராஸ் விமானநிலையத்தின் வான்வழிப்போக்குவரத்து நெரிசல் காரணமாக, மெட்ராஸில் இயங்கிவந்த, இந்தியாவின் மிகப்பழமையான விமானப்பயிற்சி நிறுவனங்களில் ஒன்றான "மெட்ராஸ் பிளையிங் கிளப்" தனது விமானஓட்டுனர் பயிற்சி மற்றும் இதர பொறியியல் பயிற்சி நடவடிக்கைகளை திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்திற்கு கடந்த நவம்பர் முதல் மாற்றிக்கொண்டது.
89 ஆண்டுகள் பழமையானது இந்த "மெட்ராஸ் பிளையிங் கிளப்" நிறுவனமாகும்.
🛫 எதிர்பார்ப்புகள் 🛫
✅ நிறுத்தப்பட்ட தாய் ஏர் ஏசியா விமானநிறுவனத்தின் சேவை மீண்டும் கிடைக்குமா?
✅ இங்கு ஏழு ஆண்டுகளுக்கு மேலாக சேவை வழங்கி பின்னர் தனது நிதிச்சுமைகளுக்காக வெளியேறிய ஜெட் ஏர்வேஸ் விமானநிறுவனமானது, நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு, மீண்டும் தனது சேவையை இங்கு மீட்டெடுக்குமா?
✅ சில ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு சேவை வழங்கிப் பின்னர் வெளியேறிய "ஸ்பைஸ் ஜெட்" விமானநிறுவனம் இந்த ஆண்டாவது இங்கு சேவை தொடங்குமா?
✅ இதுவரை இங்கு சேவை வழங்காத ஏர் இந்தியா, கோ ஏர், ஏர் ஏசியா இந்தியா, ட்ரூ ஜெட் போன்ற விமானநிறுவனங்கள் இந்த ஆண்டாவது சேவையைத் தொடங்குமா?
✅ பதினொன்று ஆண்டுகளுக்கு மேலாக ஆகியும், இந்தியன் ஏர்லைன்ஸால் சேவை வழங்கப்பட்டு பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்ட, "குவைத்" விமானசேவை இந்த ஆண்டாவது கிடைக்குமா?
✅ தோஹா, ஜித்தா போன்ற முக்கியத் தேவையுடைய விமானநிலையங்களுக்கு விமானசேவை கிடைக்குமா?
✅ பம்பாய், டெல்லி, ஹைதராபாத் போன்ற உள்நாட்டு விமானநிலையங்களுக்கான நேரடி சேவை கிடைக்குமா?