திருச்சி கலையரங்கம் தியேட்டர் பிரமாண்ட திருமண மண்டபமாகிறது .
திருச்சி கலையரங்கம் தியேட்டர் பிரமாண்ட திருமண மண்டபமாகிறது .
தமிழகத்தின் மிக பிரமாண்டமான தியேட்டர் என பெயர்பெற்ற திருச்சி கலையரங்கம் என்கிற அடையாளத்தை மாற்றி தற்போது மிகப்பெரிய திருமண மண்டபமாக மாறுகிறது.
தமிழகத்தின் பல அரசியல் தலைவர்களின் கால்தடம் பதிந்த கலையரங்கம் தியேட்டர் உருவான விதம் இப்படித்தான்.
1962-ம் ஆண்டு திருச்சி ஆட்சித்தலைவராக இருந்த குலாம் முகமது பாஷா என்பவர் கால்நடை சங்கம் விழா நடத்தும் பொறுப்பை கி.ஆ.பெ.விசுவநாதனிடம் ஒப்படைத்தார். அந்த நிகழ்ச்சி முடிந்து மீதம் இருந்த 642ரூபாயை, கி.ஆ.பெ.வி, அப்போதைய ஆட்சித்தலைவர் குலாம் முகமது பாஷாவிடம் ஒப்படைத்தார். ஆட்சித்தலைவரோ நீங்கதான் நிறைய நல்லது பண்றீங்க. அதனால் இந்த நிதியையும் வைத்துக்கொண்டு உங்களுடன் கொஞ்ச பேரைச் சேர்த்து நல்லது செய்யுங்கள் என்று சொன்னார். அதன்படிதான் திருச்சி மாவட்ட நலப்பணிக்குழு என்கிற அமைப்பு உருவானது.
அடுத்து 1964-ம் ஆண்டு கலெக்டராக இருந்த கே.சொக்கலிங்கம் சென்னை டி.கே.எஸ். பிரதர்ஸ் நாடக சபாவை திருச்சிக்கு வரவழைத்து திருச்சி தேவர் மன்றத்தில் 3 நாட்கள், 3 மிகப்பெரிய நாடகத்தை நடத்தினார். அதைக்காண மக்கள் கூட்டம் அலைமோதியதால், நிதி குழுவின் இருப்பு ரூபாய் 1,00,033.50 ஆக உயர்ந்தது.
ஜெயலலிதா நடனம்
மேலும் 1968-ம் ஆண்டு ஹரி பாஸ்கர் ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றபோது உலக தமிழ் மாநாட்டு நிதிக்காவும், மருத்துவக்கல்லூரி அமைப்பதற்காகவும் திட்டமிட்டு முன்னால் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் தலைமையில் ஜெயலலிதா அவர்கள் நடத்திய நாட்டிய நடனத்தின் மூலம் 25 இலட்ச ரூபாய் வசூல் ஆனது.
உலக தமிழ்மாநாட்டிற்கு பணம் தேவைப்படாமல் போனதாலும் மருத்துவக்கல்லூரி மற்ற மாவட்ட மக்களின் போராட்டத்தினால் திருச்சியில் வைக்க முடியாமல் போனதாலும் அந்த நிதி முழுவதும் மாவட்ட நலப்பணிக்குழுவிற்கு நிதியாகச் சேர்ந்தது.
அடுத்து 01.07.1971ல் திருச்சியில் விவசாய கல்லூரி ஆரம்பிப்பதற்காக மாவட்ட நலப்பணிக்குழு, அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் 14இலட்சம் கொடுத்தனர். இரண்டு ஆண்டுகள் ஆகியும் விவசாய கல்லூரி துவங்கப்படாததால் அந்தத் தொகை மீண்டும் மாவட்ட நலப்பணிக்குழு கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
அதேபோல் 1974ம் ஆண்டு ஆட்சித்தலைவராக இருந்த வைத்திலிங்கம் நாவலர் நெடுஞ்செழியன் கல்லூரி அமைக்க வசூல் ஆன தொகை ரூபாய் 4,50,000, அதே போல 1975ல் ராஜாஜி, சுகாதாரத்திட்டத்துக்காக பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட சுமார் 15 இலட்சமும், 1976ம் ஆண்டு மாவட்ட கழக நிதியிலிருந்து 4 இலட்ச ரூபாயும் இந்த மாவட்ட நல பணிக்குழு கணக்கில் சேர்ந்தது.
1975ம் ஆண்டு மாவட்ட நலநிதிக்குழு அரசாங்க சட்டப்படி பதிவு செய்யப்பட்டது. இதற்கு ஆரம்பத்தில் செயலாளராகவும், பொருளாளராவும், கி.ஆ.பெ.விசுவநாதன் இருந்தார். பிறகு மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் உள்ளுர் பிரமுகர் உள்ளிட்ட 33 பேர் செயற்குழு உறுப்பினர்கள் கொண்டு செயல்பட ஆரம்பித்தது.
இப்படி சேர்ந்த நிதிகளை கொண்டு 1976-ம் ஆண்டு கலையரங்கம் திரையரங்கத்தை மிகப்பிரமாண்டமாக கட்டுவதற்கு ஸ்ரீநிவாசன் கட்டிட மேதையின் ஆலோசனை பெறப்பட்டது. அதனடிப்படையில்தான், கம்பீரமாகவும் விசாலமாகவும், கலையழகு மிகுந்த திருச்சி கலையரங்கம் தியேட்டர், தென் கிழக்கு ஆசியாவிலே மிகப்பெரிய திரையரங்கமாக உருவானது.
பெயர் மாறிய கதை!
அந்த கால திரையுலக சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். வழக்கில் இருந்து மீண்டாலும் அவருடைய சிறை வாழ்க்கை அவரை, முற்றும் துறந்த ஞானி போல மாற்றியது. பின்னர், அவர் நடித்த சில படங்களும் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. அதனால் நடிப்பதில் ஆர்வமின்றி இருந்தார். தவிர்க்கமுடியாத கடன்கள் காரணமாக திருச்சியில் அவர் கட்டிய பிரம்மாண்டமான மாளிகை ஏலத்துக்கு வந்தது. ஆனால் அதை வெளியே தெரியாமல் பாகவதருக்கு உதவ நினைத்த எம்.ஜி.ஆர் மாளிகையை மீட்டு பாகவதரிடமே கொடுத்தார்.
காலங்கள் மாறின. பாகவதர் மறைவுக்குப் பிறகு அவரது குடும்பத்தினர் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பல ஆண்டுகள் கழித்து எம்.ஜி.ஆர். முதல்வராகவும் ஆகிவிட்டார். பாகவதரின் குடும்பம் வறுமையில் வாடுவது குறித்தும் சென்னையில் அவர்கள் வசிப்பது பற்றியும் ஒருநாள் எம்.ஜி.ஆருக்கு தெரியவந்தது. அந்த நேரத்தில்தான் தியாகராஜ பாகவதர் வாழ்ந்த திருச்சியில் மாவட்ட நலப்பணிக்குழு சார்பில் கலையரங்கம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழாவுக்கு முதல்வர் எம்.ஜி.ஆர். செல்கிறார். விழாவுக்கு தியாகராஜ பாகவதர் குடும்பத்தை அழைத்து வருமாறு கூறினார்.
விழாவன்று மேடையில் பாகவதரின் குடும்பத்தாருக்கு அதிமுக கட்சியின் சார்பில் எம்.ஜி.ஆர். பண முடிப்பு வழங்கினார். அதோடு, பாகவதர் குடும்பமே எதிர்பாராத வகையில் காலம்தோறும் பாகவதர் பெயர் நிலைக்கும் வகையில், மாவட்ட நலப்பணிக்குழு சார்பில் கட்டப்பட்ட கலையரங்கத்துக்கு தியாகராஜ பாகவதர் மன்றம் என எம்.ஜி.ஆரே.பெயர் சூட்டினார். பாகவதரின் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் எம்.ஜி.ஆர். வைத்திருந்த அன்புக்கும் அவரது பரந்த மனத்துக்கும் இது உதாரணம்.
ஏராளமான வசதிகள்
முதல் முறையாக திருச்சியில் மட்டுமல்லாமல் தமிழகத்திலேயே 1417 இருக்கைகள் கொண்ட ஏசி திரையரங்கம் இதுதான். மாதம் 43,000 ஆயிரம் வாடகையாக நிர்ணயிக்கப்பட்டு முதல் முறையாக பத்மா எண்டர் பிரைசஸ் என்பவர்கள் ஏலம் எடுத்து நடத்தினர். அதன்பிறகு மருத்துவர் சிவக்கண்ணு, ஜோசப் லூயிஸ், மகாலிங்கம், வின்சென்ட் அடைக்கலராஜ், பாலசுப்ரமணியன் என்பவரின் பவர் ஏஜெண்ட் கஸ்தூரி மரியம்பிச்சை, வின்சென்ட் அடைக்கலராஜ், மீண்டும் பலசுப்ரமணியன் பவர் ஏஜெண்ட் கஸ்தூரி மரியம்பிச்சை என பலரும் இந்த தியேட்டரை நடத்தி வந்தார்கள். இதில் கடைசியாக மாதம் ஒன்றுக்கு 9லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுத்திருக்கிறார்கள்.
கடைசியாக தியேட்டரை எடுத்து நடத்திய இருந்த கஸ்தூரி மரியம்பிச்சையின் நிர்வாக சிக்கலில் தியேட்டரை நடத்த முடியாத சூழ்நிலை உருவாகி தியேட்டரை காலி செய்து கொடுத்தார். இதன் பிறகு தியேட்டர் செயல்படாமலே இருக்கிறது.
ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் என தமிழகத்தின் பிரபலங்கள் வலம்வந்த திருச்சி கலையரங்கம் திரையேட்டர், இனி கலையழகை காண்பிக்கும் திரையரங்கமாக இயங்காது.அதனை இனி அப்படிச் சொல்லி அழைக்கவும் முடியாது.
இந்த நிலையில் தான் திருச்சி மாவட்ட நலப்பணிக்குழு, கலையரங்க தியேட்டரை மறு சீரமைப்பு செய்வது என்பது மிகவும் சிரமமான காரியம். அதனால் தியேட்டரை அப்படியே திருமண மண்டபமாக மாற்றலாமா என்கிற யோசனை முன்வைக்கப்பட்டு, நிதிக்குழுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்ற ராசமணி மற்றும் மாவட்ட நலப்பணிக்நிதிகுழு பொருளாளர் கோவிந்தராஜ் மற்றும் உறுப்பினர் நடத்தி ஆலோசனை குழுவில் 2 கோடி ரூபாய் செலவில் 5 மாதத்திற்குள் புதுபித்து பிரமாண்டமான திருமண மண்டபமாக மாற்றுவதற்கான பூஜை 05.02.2018 காலை நடைபெற்றது.
பூஜை முடிந்ததும் பத்திரிகையாளர்களிடம் பேசிய கலெக்டர் ராசாமணி கிட்ட 2 கோடி ரூபாய் செலவில் புணர் அமைக்கும் படி ஆரம்பமாகிறது. திருச்சி மக்களுக்கு பயன்படக்கூடிய மிக பிரமாண்டமான மண்டபமாக இது இருக்கும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்டநலநிதிகுழுவின் பொருளாளர் கோவிந்தராஜ், உறுப்பினர்கள் சோ. சத்தியசீலன், ஞானராஜ், சிவானி செல்வராஜ், மருத்துவர் அலீம் உள்ளிட்டோர் மற்றும் அரசு துறையின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment